முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவ மழை தீவிரம் வெள்ளத்தில் தத்தளிக்கும் தமிழ்நாடு தமிழகம்

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ. - 27 - குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி கொண்டிருக்கிறது.  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை விட்டு விட்டு தொடர்ந்து பெய்து வருவதால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்கள் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகள் பழுதடைந்து வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சென்னையில் வியாசர்பாடி, கொட்டிவாக்கம், மடிப்பாக்கம், துறைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வட சென்னையில் குளம் போல் மாறியுள்ள சாலைகளால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.  நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையால் தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் கனத்த மழை பெய்துள்ளது. குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு நேற்று முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றமடைந்தனர்.  மூன்றாவது நாளாக மழை தொடர்வதை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, ராமநாதபுரம், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, விழுப்புரம், தஞ்சை, நாகை, கடலூர், நெல்லை, கரூர், குமரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.  தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிக பலத்த மழைபெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகபட்சமாக திருவாடானையில் 20 செ.மீ. சென்னையில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தென் மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையாக புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்