முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டால் அமளி

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.30 - சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இந்த முடிவை அரசு திரும்பப் பெறவேண்டும் என்ற தங்களது கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக இருந்ததால் சபை நடவடிக்கைகள் ஸ்தம்பித்துப்போயின. 

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகளும் தங்களது கோரிக்கையில் பிடிவாதமாக இருந்ததால் சபை நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன. முன்னதாக நேற்று பாராளுமன்றத்தின் இரு சபைகளும் கூடியதுமே பிரச்சனை தொடங்கிவிட்டது. இப்பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபை, ராஜ்யசபை ஆகிய இரு சபைகளிலுமே எந்த அலுவல்களுமே நடக்கவில்லை. அதற்கு முன்பாக இந்த விஷயம் தொடர்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்திலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால் அந்த கூட்டமும் தோல்வியில் முடிந்தது. இந்த முடிவை அரசு திரும்பப்பெறுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூறிவிட்டதால், அனைத்துக் கட்சி கூட்டமும் தோல்வியில் முடிந்தது. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்ற முடிவை ரத்து செய்துவிட்டு பாராளுமன்றத்தை நடத்துக என்று பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதால் சபையில் எந்த அலுவல்களும் நடைபெறவில்லை. பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. அன்றுமுதல் நேற்றுவரை பல்வேறு பிரச்சனைகளால் சபையில் அமளி ஏற்பட்டதுதான் மிச்சம். குறிப்பாக தெலுங்கானா பிரச்சனை, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றிய பிரச்சனை போன்றவற்றால் சபையில் அலுவல்கள் ஒரு சில நாட்கள் நடக்கவில்லை. அதன்பிறகு இப்போது அன்னிய முதலீட்டு பிரச்சனை வெடித்துள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றத்தில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக காணப்படுகிறது. எதிர்க்கட்சிகளோடு ஆளும் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் சேர்ந்துகொண்டதால் பிரச்சனை பூதாகரமாக வெடித்துவிட்டது. அந்நிய முதலீட்டு முடிவை ரத்து செய் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இந்த கோஷத்தால் 11 மணிக்கு கூடிய இரு சபைகளும் முதலில் ஒத்திவைக்கப்பட்டன. பிறகு மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இரு சபைகளும் மீண்டும் கூடின. அப்போதும் பா.ஜ.க., டி.ஆர்.எஸ்., இடதுசாரிகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு விரைந்து கோஷமிட்டு கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதால் சபை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

சில்லரை அன்னிய முதலீடு என்பதை காங்கிரஸ் எம்.பி. சஞ்சய்சிங்கும் எதிர்த்துள்ளார். இவர் விரைவில் தேர்தல் வரவிருக்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவரே அரசின் முடிவை எதிர்த்துள்ளார். இது ஏழைகளை பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

இந்த நிலையில் பாராளுமன்ற நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து இடையூறு செய்வதை மத்திய அமைச்சர் கபில்சிபல் கண்டித்துள்ளார். எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதற்கும் இப்போது அவர்களது நடத்தைக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்று கூறி கபில்சிபல் வருத்தப்பட்டார். வேலை செய்வதுதான் நமது வேலை. அதற்காக நாம் சம்பளமும் பெறுகிறோம். இது பொதுமக்கள் சேவை பற்றிய பிரச்சனை. பணப்பிரச்சனை அல்ல என்றும் கபில்சிபல் காட்டமாக தெரிவித்தார். மத்திய அரசு தனது முடிவை திரும்பப் பெறவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றனவே என்று கேட்டபோது, நான் கருத்துச்   சொல்ல விரும்பவில்லை என்று கூறி முடித்துக்கொண்டார் கபில்சிபல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்