முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி. ஊழல் வழக்கில் ஷாகித் பால்வாவுக்கும் ஜாமீன்

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, நவ.30 - 2ஜி.ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஷாகித் உஸ்மான் பால்வாவுக்கும் சி.பி.ஐ. கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. முன்னதாக இந்த வழக்கில் ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளரான ஷாகித் உஸ்மான் பால்வா தன்னை ஜாமீனில் விடக்கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் கோரிக்கையை நாங்கள் எதிர்க்கப்போவதில்லை என்று சி.பி.ஐ.யும் கோர்ட்டில் கூறியிருந்தது. காரணம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி உட்பட 5 பேருக்கு டெல்லி ஐகோர்ட்டும், 5 நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டும் ஜாமீன் வழங்கிவிட்டதால் தாங்கள் இதை எதிர்க்கப்போவதில்லை என்று சி.பி.ஐ. கூறியிருந்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விட்டதையும் சி.பி.ஐ. நீதிபதி ஓ.பி.ஷைனியிடம் சிறப்பு அரசு வழக்கறிஞர் லலித் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா மீது என்ன குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டதோ அதே குற்றச்சாட்டுக்கள்தான் பால்வா மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் லலித் சுட்டிக்காட்டினார். 

இந்த நிலையில் பால்வாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறுகையில், எனது கட்சிக்காரர் ஒரு தனிப்பட்ட நபர்தான். அரசு ஊழியர் அல்ல. அவர் இன்னும் நீதிமன்ற காவலில் இருக்கிறார் என்று வாதாடினார். கனிமொழி உட்பட 5 பேருக்கு ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே நீதிமன்றம் இதைப் பரிசீலிக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம்சாட்டப்பட்டவரும் ஒரு அப்பாவிதான் என்றும் அகர்வால் வாதாடினார். இதையடுத்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஷாகித் உஸ்மான் பால்வாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கில் இதுவரை 10 பேர் ஜாமீன் பெற்றுள்ளனர். யூனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் திருபாய் அப்பானி குழும அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரிநாயர், சுரேந்திர பிபாரா ஆகியோருக்கு நவம்பர் 23 ம் தேதியன்று உச்சநீதிமன்றமும், கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் மற்றும்  கரீம்மொரானி, ராஜீவ் அகர்வால்,  ஆசிப்பால்வா ஆகியோருக்கு நவம்பர் 28 ல் டெல்லி உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்கியுள்ளன. உஸ்மான் பால்வாவுக்கு நேற்று ஜாமீன் கிடைத்துள்ளது. இதுவரை மொத்தம் 11 பேர் ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளனர். இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மட்டும் இதுவரை ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்