முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி.விசாரணையை மாற்றியதை எதிர்த்து வழக்கு

புதன்கிழமை, 23 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.- 24 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையை திகார் சிறை வளாகத்திற்கு மாற்றியதை எதிர்த்து அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர். ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத்  துறை அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேருக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது. மற்றவர்கள்  தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டெல்லி பாட்டியாலா இல்லத்தில் நடைபெற்று வரும்  2 ஜி. ஊழல் வழக்கு விசாரணையை திகார் சிறை வளாகத்திற்கு மாற்ற டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இனி இந்த விசாரணை திகார் சிறை வளாகத்திலேயே நடைபெறும் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி தெரிவித்து இருந்தார். இந்த முடிவை எதிர்த்து 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளனர்.

ஐகோர்ட்டு நீதிபதிகள்  எஸ்.கே.கவுல், ராஜீவ் ஷக்தேர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் இந்த அப்பீல் மனுக்களை  குற்றவாளிகளின் சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள்  தாக்கல் செய்தனர். திகார் சிறை வளாகத்திற்கு இந்த வழக்கு விசாரணையை மாற்றுவதால் குற்றவாளிகளுக்கும் அவர்களது  வக்கீல்களுக்கும் பல்வேறு அசவுகரியங்கள் ஏற்படும் என்றும் எனவே இந்த விஷயத்தில் தலையிட்டு வேறு முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுக்களில் கேட்டுக்கொண்டுள்ளனர். இது தீவிரவாத செயல் தொடர்பான வழக்கு விசாரணை அல்ல என்றும்  எனவே இந்த விஷயத்தில் மாற்று முடிவை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள்  அந்த மனுக்களில் கேட்டுக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்