முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்மாடியின் ஜாமீன் மனு குறித்து நோட்டீஸ்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.1 - காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்து தனது பதிலை அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் கடந்த 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக செய்யப்பட்ட ஏற்பாடுகளில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் அமைப்பாளர்கள் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு ஜாமீன் வழங்கும்படி டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீது ஐகோர்ர்டு நீதிபதி முக்தா குப்தா விசாரணை நடத்தினார். இந்த வழக்கில் கல்மாடிக்கு ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்து தங்களது பதிலை வருகிற ஜனவரி 6  ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு சி.பி.ஐ.க்கு ஐகோர்ட்டு நீதிபதி முக்தா குப்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

கல்மாடியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுசீல்குமார் தமது வாதத்தில் தெரிவிக்கையில், கடந்த நவம்பர் 3 ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக கீழ்க்கோர்ட்டில் சி.பி.ஐ. ஒரு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதன்படி கல்மாடி தொடர்பான விசாரணைகள் அனைத்தும் முடிந்துவிட்டதாக சி.பி.ஐ. அந்த அறிக்கையில் கூறியுள்ளது. எனவே கல்மாடியை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  கல்மாடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுவிட்டன. அவர் கடந்த ஆகஸ்டு 25 ம் தேதிமுதல் நீதிமன்ற காவலில் இருக்கிறார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவிஸ் டைமிங் ஒமேகா என்ற நிறுவனம் இதுவரை கீழ்க்கோர்ட்டில் ஆஜராகவில்லை. இந்த நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதிநிதிகள் ஆஜராவதற்கு காலதாமதம் ஆகும். எனவே இவ்வழக்கு விசாரணையும் நீண்ட நாட்களுக்கு நடைபெறலாம். எனவே கல்மாடிக்கு ஜாமீன் வழங்கும்படி வக்கீல் சுஷீல்குமார் கேட்டுக்கொண்டார்.  தனக்கு ஜாமீன் வழங்குவதற்கு சி.பி.ஐ. தீர்ப்பு ஒன்றையும் கல்மாடி சுட்டிக்காட்டி இருந்தார். இந்த வாதத்திற்கு பிறகே சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு நீதிபதி முக்தா குப்தா உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்