பிரதமர் மன்மோகன் சிங்குடன் வசேனா எம்.பி.க்கள் சந்திப்பு

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      இந்தியா
manmohan

 

புதுடெல்லி,மார்ச்.12 - பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் திடீரென்று சந்தித்து பேசினார்கள். அப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கப்படும் ஜெய்தாபூர் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

நாட்டில் மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கான இயற்கை வளம் அதிகமாக இல்லை. மேலும் மின்சார உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதனால் அணுவை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் பல்வேறு இடங்களில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில் அணுமின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அதேமாதிரி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜெய்தாபூரில் அணுமின்சார உற்பத்தி நிலையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதற்கு பிரதமர் மன்மோகன் சிங்கை சிவசேனா கட்சி எம்.பி.க்கள் நேரில் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். அணுமின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தும்படியும் எம்.பி.க்கள் கேட்டுக்கொண்டனர். மனோகர் ஜோஷி தலைமையில் சிவசேனா எம்.பி.க்கள் ஒன்று சேர்ந்து பிரதமரை சந்தித்தனர். அப்போது பிரதமரிடம் மனு ஒன்றையும் கொடுத்தனர். ஜெய்தாபூரில் அணுமின்சார உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், மாநில அரசால் பல கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. பிரதமரை சந்தித்த பின்பு பாராளுமன்றத்திற்கு வெளியே ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறுகையில் ஜெய்தாபூரில் அமைக்கப்பட்டு வரும் அணுமின்சார உற்பத்தி நிலைய பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமரை கேட்டுக்கொண்டோம் என்றார். மாநில வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுப்பதை தடுத்து நிறுத்தமாட்டோம். அதே சமயத்தில் இந்த மாதிரியான திட்டங்களை தொடங்குவதற்கு முன்பு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என்று ஜோஷி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: