முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு - இரு சபைகளும் ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.1 - சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நேற்றும் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் லோக்சபை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், சபாநாயகர் மீராகுமார் வழக்கமான பணிகளை துவக்குவதன் அடையாளமாக கேள்வி நேரத்தை எடுத்துக்கொள்வதாக அறிவித்தார். அப்போது பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உடனடியாக எழுந்து சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என்று கோரி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது ஆந்திராவைச் சேர்ந்த சில காங்கிரஸ் எம்.பி.க்களும், தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களும் தங்கள் கைகளில் இருந்த பதாகைகளை அசைத்தபடி தனி தெலுங்கானா மாநிலத்தை அமைக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களும் தங்கள் கைகளில் பதாகைகளுடன் எழுந்து சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற முடிவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினார்கள். தெலுங்குதேசம், இடது கம்யூனிஸ்ட், சிவசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் சபையின் மையப் பகுதியை நோக்கி விரைந்தனர்.

இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. எம்.பி.க்களை அமைதிப்படுத்தி அவர்களை அவரவர் இருக்கைகளில் அமரச்செய்ய சபாநாயகர் மீராகுமார் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டார். ஆனால் அந்த வேண்டுகோள்கள் பலிக்கவில்லை. எம்.பி.க்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிக்கொண்டே இருந்தனர். இதனால் சபை நடவடிக்கைகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டதால் சபையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் மீராகுமார் ஒத்திவைத்தார்.

பிறகு சபை மீண்டும் கூடியபோதும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு உள்பட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்களும், ஆளும் கூட்டணி எம்.பி.க்களும் ஆளுக்கு ஒரு பக்கமாக கூச்சல் போட்டனர். இதனால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டது. யார் என்ன பேசுகிறார்கள் என்பது காதில் விழாத அளவுக்கு பேரிரைச்சல் ஏற்பட்டது. இதையடுத்து சபையை தொடர்ந்து நடத்த முடியாததால் லோக்சபையை நேற்று நாள் முழுவதுமாக சபாநாயகர் மீரா குமார் ஒத்திவைத்தார். 

இதேபோல ராஜ்யசபையிலும் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கிளப்பி பா.ஜ.க., பகுஜன்சமாஜ், ஐக்கிய ஜனதா தளம், அ.தி.மு.க. ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று கோரி இவர்கள் கோஷம் எழுப்பினார்கள். சிலர் சபையின் மையப் பகுதிக்கே சென்று கோஷமிட்டனர். இதனால் கேள்வி நேரத்தை நடத்த முடியவில்லை. இதையடுத்து அமளிக்கு இடையே சபையை நண்பகல் 12 மணிவரை சபைத் தலைவர் ஹமீது அன்சாரி ஒத்திவைத்தார். 

பிறகு சபை மீண்டும் கூடியது. ஆனாலும் கூட எதிர்க்கட்சிகளின் அமளி ஓயவில்லை. தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் இட்டனர். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவை உடனே வாபஸ் பெறவேண்டும் என்று கோரி, எதிர்க்கட்சி எம்.பி.க்களும், ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரசும் கோஷங்களை எழுப்பின. இதையடுத்து ராஜ்யசபையை நேற்று நாள் முழுவதுமாக சபைத் தலைவர் அன்சாரி ஒத்திவைத்தார். 

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளி, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நான்கு நாட்களும் எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திய தொடர் அமளியால் பாராளுமன்றத்தின் இரு சபைகளும் தொடர்ந்து 4-வது நாளாக முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்