முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீடு: சோனியாவுடன் பிரணாப் சந்திப்பு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 1 - சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடுகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சந்தித்து விவாதித்தார். சில்லரை வணிகத்தில் 51 சதவீத வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்கு பா.ஜ.க.  அ.தி.மு.க., திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த பிரச்சினை காரணமாக பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு லோக் சபை ராஜ்ய சபை ஆகிய இரு சபைகளும் முடங்கிப்போய் உள்ளன.

ஏற்கனவே இந்த பிரச்சினை குறித்து ஜனாதிபதி  பிரதீபா பாட்டீல்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசி ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சந்தித்து இப்பிரச்சினை குறித்து விவாதித்தார்.

இந்த சந்திப்பு சோனியா காந்தியின் இல்லத்தில் சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது.

காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் நடைபெறுவதற்கு சற்று முன்னதாக இந்த சந்திப்பு நடந்ததாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் மன்மோகன் சிங்,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை தான் சந்தித்து பேச இருப்பதாகவும் அதன் பிறகு சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு தொடர்பாக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கிளப்பியுள்ள புயலை சமாளிப்பது குறித்த முடிவை அரசு அறிவிக்கும் என்றும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரணாப் முகர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்