முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய தலைமைச் செயலக முறைகேடு குறித்த மனு தள்ளுபடி

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.2 - ​புதிய தலைமை செயலக முறைகேடு சம்பந்தமாக தமிழக அரசு நியமித்த கமிஷனை எதிர்த்து முன்னாள் தி.மு.க. அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து புதிய நீதிபதியை நியமிக்கவும் உத்தரவிட்டனர். இதுபற்றிய விபரம் வருமாறு:- சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தின் போது தலைமைச் செயலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் கட்டப்பட்டபோது போடப்பட்ட திட்ட செலவுக்கும், பின் செலவழித்த தொகைக்கும் ஏகப்பட்ட முரண்பாடு உள்ளது. மேலும் பணிகளும் நிறைவடையவில்லை. இதனால் பணிகளை நிறுத்திய தமிழக அரசு அந்த கட்டிடத்தை பயன்படுத்தவில்லை.  இந்த கட்டிட கட்டுமான பணியில் முறைகேடு நடந்தது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தங்கராஜ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது. தமிழக தலைமைச் செயலாளர் சார்பில் கடந்த ஜூன் 22 அன்று  இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.  இந்த அரசாரணையை எதிர்த்து முன்னாள் தி.மு.க. அமைச்சர் தங்கம் தென்னரசு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் முருகேசன், கே.கே.சசீதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் நவதகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். கட்டுமான பணியில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் குறித்த பதில் மனு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு கூறினார்கள்.

தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:​

விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தங்கராஜ் டான்சி வழக்கில் தீர்ப்பளித்தார் என்பதற்காக அவர் ஒருதலை பட்சமாக செயல்படுவார் என்ற மனுதாரரின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் கருத்து கேட்டறிந்துதான் விசாரணை கமிஷனுக்கு ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  புதிய தலைமை செயலக கட்டிடத்திற்கு ரூ. 200 கோடி மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு பின்னர் ரூ. 600 கோடி அளவுக்கு பணிகள் நடைபெற்றதாகவும் இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே விசாரணை கமிஷனை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

நீதிபதி தங்கராஜ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வக்கீல் விஜயலட்சுமி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் பைசல் செய்து உத்தரவிட்டனர். விசாரணை கமிஷன் பொறுப்பில் இருந்து நீதிபதி தங்கராஜ் ராஜினாமா செய்து விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே விஜயலட்சுமி மனுவில் எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியம் இல்லை. விசாரணை கமிஷனுக்கு புதிய நீதிபதி ஒருவரை தமிழக அரசு நியமித்து கொள்ளலாம் என்று அவர்கள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்