முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அங்கன்வாடிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நியமனம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.2 - தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்ட மையங்கள் மற்றும் அங்கன்வாடிகளில் காலியாக காலியாக உள்ள 26,596 பணியிடங்களை நிரப்ப தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-  இன்றைய குழந்தைகள் நாளை இந்த நாட்டை நிலை நிறுத்தும் தூண்கள். வளமான மற்றும் ஆரோக்கியமான எதிர்கால தலைமுறையினரை உருவாக்க, குழந்தைகளின் நலன் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக உள்ள தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு குழந்தைகள் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

தமிழகத்தில் உள்ள, 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், மற்றும் வளரிளம் பெண்கள் ஆகியோர் இடையே காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கண்டறிந்து, அதனை அகற்றி, ஊட்டச்சத்து குறைபாடற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வகையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணி திட்டத்தின்கீழ் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொள்ள 2002 ஆம் ஆண்டு செயல்திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு, ஊட்டச்சத்து குறைபாடற்ற தமிழகத்தை உருவாக்கும் வகையில், ஒரு புதிய கொள்கை வெளியிடப்பட்டது.

இதனடிப்படையில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் பல்வேறு நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி, பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஒய்வூதியம் பெறும் முதியோர் உள்ளிட்ட 28 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெறும் குழந்தைகள் மையங்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும்; மையங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும்; பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  அந்த வகையில், சொந்தக் கட்டடங்களில் செயல்படும் சிறிய பழுதுகள் உள்ள 10,372 மையங்கள் மற்றும் பெரிய பழுதுகள் உள்ள 7,449 மையங்கள், ஆக பழுதுபட்டுள்ள மொத்தம் 17,821 மையங்களை  47 கோடியே, 61 லட்சம் ரூபாய் செலவில் பழுது nullநீக்கி சீரமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நிருவாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இம்மையங்களில் உள்ள குழந்தைகளின் நலனுக்காக, அவர்கள் கோடைக் காலத்தில் வெப்பத்தினாலும், குளிர் காலத்தில் போதிய வெளிச்சமின்மையாலும் அவதிப்படாமல் இருக்கும் வகையில் 27 கோடியே 21 லட்சம் ரூபாய் செலவில் 45,345 குழந்தைகள் மையங்களில் உட்புற மின் கட்டமைப்பு வசதியினை ஏற்படுத்துவதுடன் மின்விசிறி மற்றும் மின்விளக்கு ஆகியவைகளை பொருத்துவதற்கும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நிருவாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல் சுற்றுச்சூழல் மாசு காரணமாக குழந்தைகளுக்கு நோய் ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், சுற்றுப்புறச் சுகாதாரத்தை பேணும் வண்ணம், குழந்தைகள் இளம் வயதிலேயே கழிப்பறைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், 23 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பில் 29,727 குழந்தை மையங்களில் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏதுவான கழிப்பிடங்களை உருவாக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  

இதுதவிர, எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்ட மையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட மையங்களில் குழந்தைகளுக்கு புரதச் சத்துமிக்க சத்துணவு வழங்கும் பணி சிறப்பாக நடைபெறவும், தாய், சேய் நலம் காக்கும் பணிகள் செம்மையாக நடைபெறவும், பணியாளர் நியமனம் மிகவும் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு,  எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள 4,373 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள், 5,717 சத்துணவு சமையலர் பணியிடங்கள் மற்றும் 6,703 சமையல் உதவியாளர் பணியிடங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 4,689 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், 1,168 குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் மற்றும் 5,946 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள், ஆக மொத்தம் 28,596  பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த உத்தரவுகள் மூலம்,   சத்துணவு மற்றும் அங்கான்வாடி மையங்களுக்கு வருகை தரும் குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் முதியோர் ஆகியோர் நலன் பாதுகாக்கப்படும்.  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதின் மூலம் இம்மையங்களில் உள்ள பணிகள் தொய்வு இன்றி நடைபெறுவதற்கும், தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் வழி வகை ஏற்படும். இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago