முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று உலகமாற்று திறனாளிகள் தினம்: முதல்வர் வாழ்த்து

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.3 - மாற்று திறனாளிகளின் தேவைகளை அறிந்து சமுதாயத்தில் ஏற்ற மிக்கவர்களாக உயர்த்திட உதவுவேன் என்று இன்று (டிச.3) கடைப்பிடிக்கப்படும் உலக மாற்று திறனாளிகள் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:-

ஆண்டுதோறும் டிசம்பர் திங்கள் 3 ஆம் நாள்  அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்நாளில்  தமிழகத்தில் இருக்கின்ற மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகளும் சமுதாயத்தின் ஒர் அங்கமாக கருதப்பட வேண்டும் என்பதை  குறிக்கோளாகக் கொண்டு அவர்களது நல்வாழ்வுக்காக நான் முதன்முதலில் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் 1994 ஆம் ஆண்டிலிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கென புதிதாக மாநில கொள்கை ஒன்றை வகுத்து வெளியிட்டேன்.  

அதன் பிறகுதான், 1995 ஆம் ஆண்டு மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்கென ஒரு சட்டத்தை உருவாக்கியது என்பதனை இத்தருணத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.  மாற்றுத் திறனாளிகளுக்காக அரசின் சார்பாக பல நல்ல திட்டங்களை நான் வழங்கி வருவது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.  மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள், உரிமைகள்,  பாதுகாப்பு மற்றும் முழுப்பங்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  மாற்றுத்திறனாளிகளுக்கு சமுதாய வளர்ச்சியில்  முழுவதுமாக உதவிட நான் என்றுமே பின் வாங்கியது இல்லை.  

எனவே தான் மாற்றுத்திறனாளிகளும் சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு 4 கிராம் தங்கம் வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.   அதோடு மட்டுமல்லாமல்  அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த பராமரிப்பு உதவித் தொகையான 500/​ ரூபாயை 1000/​ ரூபாயாக உயர்த்தி வழங்கியதோடு மட்டுமல்லாமல், இந்த உதவித் தொகை பெறுவதற்கான வயது வரம்பினை 45 வயதிலிருந்து 18 வயதாக குறைத்து உத்தரவிட்டுள்ளேன்.  

 அரசுப் பணியில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் டிசம்பர் திங்கள் 3 ஆம் நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுவது போல், அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் மாற்றுத் திறளாளி பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு  வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.  மேலும்  மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்ய ஏதுவாக தனியாக மின் தூக்கி வசதியுடன் கூடிய பேருந்துகளையும் அறிமுகப்படுத்தியுள்ளேன்.  

மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழ்நிலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2003 ஆம் ஆண்டிலேயே சென்னை பெருநகர வளர்ச்சி குழும எல்லைக்கு உட்பட்ட கட்டடங்கள், பொது இடங்கள் ஆகியவற்றிற்கு மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி சென்று வர கட்டட விதிமுறைகளில் மாற்றம் செய்து நான் ஆணையிட்டுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த முறையை தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் பின்பற்றும் வகையில் உரிய சட்டத் திருத்தங்களை எனது அரசு விரைவில் கொண்டு வரும். 

மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் அரசு பணியிடங்களில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டை முனைப்பாக இந்த அரசு நிறைவேற்றிடும் என்பதனை தெவித்துக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் அனைத்தும் அறிந்து சமுதாயத்தில் அவர்களை ஏற்றமிக்கவர்களாக  உயர்த்திட நான் உதவுவேன் என்பதை இந்நாளில் தெரிவித்துக் கொண்டு அவர்களுக்கு என் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை  தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்