முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு வழக்கறிஞர் மீது அச்சுதானந்தன் பாய்ச்சல்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம், டிச.4 - முல்லைப் பெரியாறு அணை உடைந்தாலும் பெரிய ஆபத்து ஏதும் ஏற்படாது. அதில் இருந்து வெளியேறும் நீரை இடுக்கி அணை தாங்கிக் கொள்ளும் என்று கேரள ஐகோர்ட்டில் தெரிவித்த அரசு வக்கீல் தண்டபாணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் அவரை பதவி விலகும்படி மிரட்டியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டியே தீருவோம் என்று முதல்வர் உம்மன்சாண்டி தலைமையிலான கேரள அரசு கூறி வருகிறது. 116 ஆண்டுகள் பழமைவாய்ந்த முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், அந்த அணை உடைந்து விடும் என்று கேரள மக்கள் அச்சப்படுவதாகவும் கூறி வருகிறார்கள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி எம்.பிக்களுடன் உம்மன் சாண்டி பிரதமர் மன்மோகன்சிங்கையும், பாசன துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலையும் சந்தித்து பேசியுள்ளார். கேரளாவின் இந்த நிலைப்பாட்டிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

இது ஒருபுறமிருக்க முல்லைப் பெரியாறு அணை வழக்கு தொடர்பாக கேரள ஐகோர்ட் நீதிபதி மஞ்சுளாசெல்லூர் தலைமையிலான குழு விசாரித்து வருகிறது. கேரள அரசின் தலைமை வக்கீல் தண்டபாணி, கேரள அரசு சார்பில் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர் கூறும் போது முல்லைப் பெரியாறு அணை உடைந்தாலும், மக்களுக்கு சேதம் வராது. நீர் முழுவதையும் இடுக்கி, குளமவு, செருதானி ஆகிய 3 அணைகளும் தாங்கிக் கொள்ளும் என்றார். அவருடைய இந்த வாதம் கேரள அரசியல்வாதிகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அரசு வக்கீல் எப்படி இவ்வாறு கூறலாம் என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக, முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன், அரசு வக்கீல் தண்டபாணியை கடும் சாடியதோடு உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால் தண்டபாணியோ தனது கருத்துக்களை நேர்மையாக தெரிவித்ததாகவும், தனது கருத்து நாளிதழ்களில் திரித்து வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனால் இதனை அச்சுதானந்தன் ஏற்கவில்லை. எனக்கு தேவை தண்டபாணியின் விளக்கமல்ல. ராஜினாமாதான் என்று காட்டமாக கூறியுள்ளார். தண்டபாணியின் பேச்சு ஒட்டுமொத்த கேரள மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக இல்லை என்று அச்சுதானந்தன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்