முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும்-கருத்துக்கணிப்பு தகவல்

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.- 13 - கடுமையான விலைவாசி உயர்வு, தி.மு.க.வின் ரூ. 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் மற்றும் தி.மு.க. ஆட்சியின் அலங்கோலங்கள், கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இவற்றின் காரணமாக மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டிருப்பதால் அ.தி.மு.க. கூட்டணிவரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாகை சூடும் என்று தனது கருத்துக் கணிப்பின் மூலம் வெளியிட்டிருக்கிறது இந்திய வாக்காளர் பேரவை. இந்த பேரவை கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் ஒரு அமைப்பு ஆகும். 

கடந்த 5 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்தித்த இன்னல்கள் ஒன்றல்ல, இரண்டல்ல. அவை ஓராயிரம் என்று சொல்லலாம். தொடர்ந்து 5 ஆண்டுகளாக இடைவிடாத மின்வெட்டை அமுல்படுத்தி மக்களை வாட்டி வதைத்தது. உப்பு முதல் உளுந்து வரை அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது, செங்கல், சிமிண்ட், மணல், ஜல்லி போன்ற கட்டுமானப் பொருட்களின் தாறுமாறான விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது, பெட்ரோல் விலை உயர்வை கண்டிக்கத் தவறியது இவையெல்லாம் தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரேசன் அரிசி கடத்தல், மணல் கடத்தல், மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை போன்றவற்றாலும் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இவை தவிர, அன்றாடம் நடக்கும் கொலைகள், கொள்ளைகள் இவற்றாலும் மக்கள் வெறுத்துப் போயிருக்கிறார்கள். 

இந்த சூழ்நிலையில்தான் அடுத்த மாதம் 13 ம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. தே.மு.தி.க. போன்ற முக்கிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணி 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடும் என்று இந்திய வாக்காளர் பேரவை தெரிவித்துள்ளது. கோவையை மையமாக வைத்து இயங்கி வரும் இந்த அமைப்பில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர் கூட்டமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

கடந்த 2004 ல் நடந்த தேர்தலில் இந்திய அளவில் ஒரு மெகா சர்வே நடத்தி சோனியா காந்தி தலைமையில் இடதுசாரிகள் ஆதரவுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்ற கருத்துக் கணிப்பை இந்த அமைப்புதான் வெளியிட்டது. அதற்கடுத்து 2006 சட்டமன்ற தேர்தலின் போது இழுபறியான சீட்டுக்களை பெற்று தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சிதான் ஏற்படும் என்ற சர்வேயையும் இந்த அமைப்புதான் வெளியிட்டது.

தற்போதும் இந்த அமைப்பு ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. கடந்த 5 ஆண்டுகளில் கருணாநிதி அரசு பற்றி வெளிவந்த விமர்சனங்கள் பலவற்றை கேள்விகளாக தொகுத்து அவற்றுக்கு மக்களிடம் பதில்களை இந்த அமைப்பு பெற்றுள்ளது. முதல் கேள்வியாக, தமிழ்நாட்டில் நடக்கும் தி.மு.க. ஆட்சி நல்லாட்சி என்று நினைக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு வெறும் 5 சதவீதம் பேர் ஆம் என்றும் 95 சதவீதம் பேர் இல்லை என்றும் பதிலளித்திருக்கிறார்கள். ஒரே குடும்பத்தினரின் கையில் ஆட்சி இருப்பதை விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை என்று 90 சதவீதம் பேரும், ஆமாம் என்று 10 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர். 

ரூபாய்க்கு ஒரு கிலோ அரசி வழங்குவது, கடத்தல் வியாபாரிகளுக்குத்தான் அதிக பயனுள்ளதாக மக்கள் கருதுகிறார்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஆம் என்று 80 சதவீதம் பேரும், இல்லை என்று 20 சதவீதம் பேரும் குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியே வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 98 சதவீதம் பேர் இல்லை என்றே கருத்து கூறியிருக்கிறார்கள். மொத்தமுள்ள 25 கேள்விகளில் 22 கேள்விகளுக்கு தி.மு.க. ஆட்சிக்கு எதிரான கருத்துக்களையே 93.40 சதவீதம் பேர் கூறியிருக்கிறார்கள். 

நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்று மக்கள் நினைக்கிறார்களா? தி.மு.க. ஆட்சி கூடாது என்று விரும்புவோர் ஓரணியில் திரள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களா? என்பது போன்ற கேள்விகளுக்கும் ஆம் என்றே 100 க்கு நூறு சதவீதம் பேர் தங்கள் பதிலை டிக் அடித்திருக்கிறார்கள். இவர்களது சர்வேயின்படி கடுமையான விலைவாசி உயர்வு, ஆ. ராசா மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டு, கருணாநிதி குடும்பத்தின் அதிகார ஆதிக்கம் ஆகியவை தமிழக மக்களிடம் கடுமையான வெறுப்பை ஏற்படுத்தியிருப்பது தெளிவாக தெரிகிறது. 

இலவச கலர் டி.வி பற்றி கேட்ட போது, கேபிள் இணைப்பை இலவசமாக கொடுக்கவில்லையே என்று மக்கள் கிண்டலாக  பதிலளித்தார்களாம்.  இந்த முறையும் ஓட்டுக்கு பணம் கொடுப்பார்களே... என்று கேட்ட போது கொடுக்கட்டும், யார் வீட்டு பணம். எங்கள் பணம்தானே. பணத்தை வாங்கிக் கொண்டு மாற்றிப் போடுவோம் என்று மக்கள் பதிலளித்தார்களாம். மக்களின் இந்த பதில் மூலம் ஆய்வு செய்த போது 234 தொகுதிகளில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி நிச்சயம் கைப்பற்றும் என்று தெரிகிறது என இந்திய வாக்காளர் பேரவை தெரிவித்துள்ளது. இந்த சர்வே கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்