முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசை கவிழ்க்க மாட்டோம்: மம்தா பானர்ஜி

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச.4 - சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டு பிரச்சினையால் மத்திய அரசை கவிழ்க்க மாட்டோம். அந்த எண்ணம் எங்களுக்கு இல்லை என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார். சில்லறை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, உ.பி. முதல்வர் மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசின் இந்த முடிவால் லட்சக்கணக்கான வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று இந்த பெண் முதல்வர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

இந்த நிலையில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் பிரச்சினையில் மறு பரிசீலனை செய்யுமாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக் கொண்டார். தொலைபேசி மூலம் மம்தா பானர்ஜியை தொடர்பு கொண்ட பிரதமர் மன்மோகன்சிங், மம்தாவின் தாயார் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மம்தாவின் தாயார் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது தெரிந்ததே. தொலைபேசியில் அவரது நலம் விசாரித்த பிரதமர் மன்மோகன்சிங், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டு பிரச்சினை குறித்தும் மம்தாவிடம் பேசினார். 

இந்நிலையில் கூக்ளியில் மம்தா பானர்ஜி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் முடிவு என்னுடைய தனிப்பட்ட முடிவல்ல. இது எனது கட்சியின் முடிவு. இருந்தாலும் பிரதமர் எனக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதால் இந்த பிரச்சினை குறித்து எங்கள் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவேன். இருந்தாலும் எங்கள் நிலையை மறுபரிசீலனை செய்வதற்கு சொற்ப அளவிலான வாய்ப்புதான் உள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசு கவிழ்வதை நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் மத்திய அரசின் இந்த முடிவை எங்களால் ஆதரிக்க முடியாது. காரணம், தேர்தல் நேரத்தில் வர்த்தகர்களுக்கும், விவசாயிகளுக்கும் நான் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். அவர்களை பாதுகாப்பதாக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறோம். அந்த உறுதியில் இருந்து என்னால் பின்வாங்க முடியாது. விவசாயிகள், வர்த்தகர்கள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் மத்திய அரசின் அன்னிய முதலீட்டு முடிவை அனுமதித்தால் இவர்களது நலன் பாதிக்கப்படும். எனவே அரசின் முடிவை ஆதரிக்க முடியாது. அது சிறிதும் சாத்தியமல்ல. இருந்தாலும் கூட கட்சியினருடன் இது குறித்து ஆலோசித்து ஒரு முடிவை தெரிவிக்கிறேன். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இந்த பிரச்சினை தொடர்பாக கடந்த 9 நாளாக அமளி நீடித்து வருகிறது. மீண்டும் பாராளுமன்றம் வரும் புதன் கிழமையன்றுதான் கூடும். அன்றும் இதே பிரச்சினை எதிரொலித்தாலும் ஆச்சரியமில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு 543 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் அரசின் பலம் 273 ஆக உள்ளது. மெஜாரிட்டியை நிரூபிக்க 272 உறுப்பினர்கள் தேவை. ஆனால் அரசுக்கு அதை விட ஒரு எண்ணிக்கை கூடுதலாகவே உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் அரசு ஆட்சி செய்து வருகிறது. இவர்களது ஆதரவு இல்லாவிட்டால் அரசு கவிழக் கூடும். ஆனால் அன்னிய முதலீட்டு பிரச்சினையில் திரிணாமுல் காங்கிரசும், தி.மு.க.வும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஒருவேளை எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் இவர்கள் அதை ஆதரிப்பார்களா? என்பதுதான் இன்றைய கேள்வி. ஆனால் அரசை கவிழ்க்கும் எண்ணம் இல்லை என்று மம்தா பானர்ஜி கூறி விட்டதால் மன்மோகன்சிங் அரசு தப்பிக்கவே வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்