முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமுளி, கம்பத்தில் சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கமாட்டேன்:சாண்டி

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், டிச. - 7 - முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் தமிழ்நாட்டில் குமுளி, கம்பம் பகுதிகளில் பதட்ட நிலை நிலவுகிறது. குமுளியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நிலவும் அசம்பாவித சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி, சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த அணைக்கு பதிலாக புதிய அணை கட்டப் போவதாக கேரள அரசு கூறி வருகிறது. காரணம், ஏற்கனவே இருக்கும் முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், அடிக்கடி ஏற்படும் நில நடுக்கத்தால் அதற்கு ஆபத்து ஏற்படும். அதனால் கேரள மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது என்று கேரளா கூறி வருகிறது. கேரளாவின் இந்த பல்லவிக்கு தகுந்தாற்போல சமீபத்தில் ஒரு திரைப்படம் வெளியானது. அதுதான் டேம் 999 திரைப்படமாகும். இந்த படத்தை கேரளாவை சேர்ந்த இயக்குனர் தயாரித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை உடைவது போல அதில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் இயக்குனரோ அதை மறுத்துள்ளார். இந்த படம் வெளியான பிறகு கேரளாவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.  முல்லைப் பெரியாறு அணை உடைந்து விடும் என்று கேரள மக்களும் நம்பத் தொடங்கி விட்டார்கள். ஆனால் இந்த பொய்ப் பிரச்சாரத்தை தமிழகம் மறுத்து வருகிறது. அணை பாதுகாப்பாக உள்ளதாக தமிழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழகத்தின் இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கேரள ஐகோர்ட்டில் அந்த மாநில வழக்கறிஞரே சில தகவல்களை தெரிவித்துள்ளார். அதாவது, பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டாலும் அதன் நீரை கீழே உள்ள இடுக்கி அணை, குலமாவு அணை, சிறுதாணி அணை ஆகிய அணைகள் தாங்கிக் கொள்ளும் என்று கேரள வழக்கறிஞரே கூறியுள்ளார். ஆனால் இந்த உண்மை நிலை புரியாமல் கேரள மக்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள்.
குமுளி, கம்பம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கேரளவாசிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக ஐயப்ப பக்தர்களையும், தமிழக லாரிகளையும் அவர்கள் தாக்குவதாக தகவல்கள் வருகின்றன. குமுளியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கம்பம் பகுதியில் நேற்று முன்தினம் கடைகள் அடைக்கப்பட்டன. கூடலூரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். தமிழக ஐயப்ப பக்தர்கள் தற்போது அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரள அமைச்சரவை கூட்டம் அவசரமாக கூடியது. அதற்குப் பிறகு கேரள முதல்வர் உம்மன் சாண்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்,
தமிழ்நாடு, கேரளா இடையே முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை தாம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை பேச்சு மூலமாக சுமூகமாக தீர்க்கப்பட வேண்டும் என்றே கேரளா விரும்புவதாகவும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர், கேரளாவுக்கு பாதுகாப்பு என்பதே தங்களது நிலை என்றும் முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். இதனிடையே இந்த பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு மற்றும் கேரளா மூத்த அதிகாரிகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த பிரச்சினை தொடர்பாக முல்லைப் பெரியாறு அணைக்கு வந்து ஆய்வு நடத்த உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரம் அளிக்கப்பட்ட குழு 2 நபர் கொண்ட குழு ஒன்றை அனுப்ப முடிவு செய்துள்ள நிலையில் மத்திய அரசு இவ்வாறு பேச்சு நடத்த இரு மாநில அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருகிற 15 அல்லது 16 ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் பொருட்டு இரு மாநில நீர்வளத் துறை செயலாளர்களுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.
ஒரு வேளை பேச்சு நடந்தால் கடந்த 6 ஆண்டுகளில் இந்த பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் முதல் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையாக இது அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் உம்மன் சாண்டி, இடுக்கி மாவட்டத்தில் போராட்டம் நடத்தி வரும் கேரள மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். சூழ்நிலையை கெடுக்கும் எந்த செயலிலும் ஈடுபடக் கூடாது என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காரணம், கம்பம், குமுளி பகுதியில் தற்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. கம்பத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி குறிப்பிட்ட உம்மன் சாண்டி, சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்தார். கேரள வழக்கறிஞர் கூறிய கருத்து பற்றி அவரிடம் கேட்ட போது, புதன் கிழமையன்று(இன்று) அமைச்சரவை கூட்டத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். எனவே அவர் தனது நிலையை விளக்குவார் என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்