முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் மலைமேல் இன்று கார்த்திகை மகாதீபம்

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், டிச.- 8 - திருப்பரங்குன்றம் மலைமேல் இன்று மாலை 6.15 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.  முருகப்பெருமானின் முதல் படைவீடு என்ற சிறப்புப்பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருக்கார்த்திகை திருவிழாவாகும். இத்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த 30 ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறுது. தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மலைமேல் மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது. இதற்கு முன் நிகழ்ச்சியாக நேற்று முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு கோவில் 6 கால் பீடத்தில் முருகப்பெருமான் தெய்வயானை அம்மன் நேற்று மாலை 6 மணிக்கு எழுந்தருளினர். சுவாமியின் முன்பு தங்கக் குடத்தில் புனித நீர் நிரப்பி வைத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.அதனைத் தொடர்ந்து சுவாமியின் ரத்தினக் கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம் முடிந்து சுவாமியின் சிரசில் கிரீடம் சார்த்தப்பட்டது. கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து பெறப்பட்ட நவரத்தின வேல் சுவாமியின் பிரதிநிதியான திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு வழங்கி மரியாதை செய்யப்பட்டது. செங்கோலுடன் சிவாச்சாரியார் திருவாச்சி மண்டபத்தை வலம்வந்து சுவாமியின் திருக்கரங்களில் செங்கோல், சேவற்கொடி ஆகியவற்றை சமர்ப்பித்தார். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள்பாலித்தார். இன்று காலை 8 மணிக்கு உற்சவர் சுப்பிரமணியசுவாமி, தெய்வயானை அம்மனுக்கு பல்வகை அபிஷேகங்கள் முடந்து சர்வ அலங்காரமாகி 16 கால் மண்டபம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் சிறிய வைரத் தேரில் எழுந்தருளி ரத வீதிகளில் வைரத் தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு கோவிலுக்குள் பால தீபமும், 6.15 மணிக்கு மலைமேல் திருக்கார்த்திகை மகாதீபமும் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து 16 கால் மண்டபம் முன்பு சொக்கப்பனை தீபக்காட்சியும் நடக்கிறது. மகாதீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு இன்று ஒருநாள் மட்டும் மலைமேல் செல்ல பொதுமக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். திருவிழாவிற்காக நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர், தர்ஹா, பெரிய ரத வீதியில் உள்ள பள்ளிவாசல் ஆகியவற்றிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  மலை மேல் உள்ள தீபத்தூணிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

புட்நோட்

---------------

திருப்பரங்குன்றம் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பட்டாபிஷேகத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் சிவாச்சாரியார்கள் செங்கோல் சமர்ப்பித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்