முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சில்லரை வணிகத்தில் முதலீடு: ஏ.பி. பரதன் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

சென்னை, டிச.9 - சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பது குறித்து மாநில அரசுகளின் கருத்துக்களை மத்திய அரசு கவனத்தில் எடுக்கவில்லை என ஏ.பி.பரதன் கூறினார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் 6வது மாநாடு சென்னையில் காமராஜர் அரங்கத்தில் நடந்தது. சங்கத்தின் வரவேற்புக்குழுத் தலைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளருமான தா.பாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநாட்டை தொடங்கிவைத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளரும், தொழிற்சங்கத் தலைவருமான ஏ.பி.பரதன் பேசியதாவது:

குழந்தை பிறப்பின்போது உடன் இருந்து மகிழும் மருத்துவர் மற்றும் மருத்துவ உதவிப் பணிப் பெண்கள் போல் இந்த வங்கி ஊழியர் அதிகாரிகள் சங்கத்தின் வளர்ச்சியோடும் இருந்து கொண்டிருப்பவன் என்ற அளவில் இந்த 6வது மாநாட்டை தொடங்கிவைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

வங்கித்துறையின் வளர்ச்சி நிலைகளும் அடிப்படையான கிராம வங்கிச் சேவைகளிலிருந்தே தொடங்கப்பட்டு இன்று சர்வதேச அளவிலான வங்கிச் சேவையாக வளர்ந்துள்ளது. ஆனால் தற்போது கிராம வங்கிகளை மூடிட வேண்டுமென்றும் அவற்றால் எந்தவித லாபமும் இல்லையென்றும் காரணம் கூறி வருகிறார்கள். இதனை வங்கி ஊழியர் சம்மேளனம், அதிகாரிகள் சம்மேளனம் ஆகியவை எதிர்த்து போராடி வருகின்றன. வங்கி குறித்து அமைக்கப்பட கண்டேல்வால் கமிட்டி அறிக்கைகளில் வங்கி ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கை குறிப்புகள் இருப்பதைக் கண்டித்து, அதனை அமல்படுத்துவதை எதிர்த்து வருகிறோம்.

சமீபத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தில் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்திடக் கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எதிர்ப்புத் தெரிவித்து அவையை விட்டு வெளியேறி வருகிறோம். அதைப்போல தொழிலாளர் விரோத வங்கி, காப்பீட்டு மசோதாக்களும் இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற இருப்பதையும் எதிர்த்திட வேண்டியுள்ளது. இந்தியாவில் சில்லறை வணிகத்தில் நாலரைக் கோடிக்கும் மேலான சிறுவணிகர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நம்பி 15, 20 கோடி பேர் உயிர் பிழைத்து வருகின்றனர். இப்படியொரு சூழ்நிலையில் வால்மார்ட் போன்ற வணிக ஜாம்பவான்களெல்லாம் இந்திய சில்லறை வணிகத்தில் முதலீட்டு உரிமைப் பெற்று கால் பதித்திட வந்தால் ஒரு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைத்திடும் என்கிறது ஆளும் காங்கிரஸ் கட்சி. என்ன வேடிக்கை என்றால் நாலரை கோடி பேர் ஏற்கெனவே இந்த சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ள அவர்களது வணிகம் தொலைந்துபோகுமே. 

மற்ற அரசியல் கட்சிகளின், பிற மாநில அரசுகளின் நிலைபாடுகள் இதில் என்னவாக இருக்கிறது என்பதை மத்தியில் ஆளும் அரசுகள் கவனத்தில் கொள்வதில்லை. தொழிற்சங்க அமைப்புகளைக் கூட அவர்கள் கலந்துபேசுவதில்லை. இவற்றையெல்லாம் எதிர்த்து தொழிற்சங்க அமைப்புகள் போராட வேண்டும். தேசிய உணவுக் கொள்கைக்காகவும் அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் உணவு கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்திட வேண்டும். இவை எல்லாவற்றிற்குமான மிகப்பெரிய பங்களிப்பினை வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் சம்மேளனங்கள் அளித்திட வேண்டும். அனைத்துத் தொழிற்சங்கங்களுடனான ஒற்றுமையினை போற்றி வளர்த்திட வேண்டும்.

இவ்வாறு ஏ.பி.பரதன் பேசினார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுக் கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, ஏ.ஐ.டி.யூ.சி.யின் தமிழ்மாநில பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.தியாகராஜன், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஆலோக் காரே, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம்  உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக  கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்