முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு புதிய அணை: கி.வீரமணி அறிக்கை

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச. 9 - முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் முடிவை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று திராவிடக் கழகத்தலைவர் கி. வீரமணி கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  கேரள மாநிலத்திற்கும் (பழைய திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு - பிரிட்டிஷார் ஆண்ட கால கட்டமாகிய - 1886 ஆம் ஆண்டு) - சென்னை மாகாணத்திற்கும் இடையே 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இன்னமும் அது நீடிக்கும் நிலையில் கேரள அரசு வேண்டுமென்றே, எங்கே அணையை உயர்த்தி தமிழ்நாடு பயன் பெறும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தாலும், அவசியமற்ற பொறாமையிலும்தான் ஆற்றொழுக்காக சென்று கொண்டிருந்த இந்தப் பிரச்சினையை வழக்குக்குரியதாக்கி சிக்கலாக்கி இரு மாநிலங்களிலும் வன்முறை வெடித்துக் கிளம்பும் அளவுக்கு விபரீதத்திற்குள் தள்ளிவிட்டது!

1. இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு - அணை பாதுகாப்புடன் இருக்கிறது என்று கூறியுள்ளது.

நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, அதில் இரு மாநிலங்கள் சார்பாக கருத்துகளை, நிலைப்பாட்டை, அவரவர் பால் உள்ள நியாயங்களை எடுத்துரைக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளே (தமிழ்நாடு, கேரள அரசுகளால்) நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் - அதற்காக காத்திராமல், புதிய அணை கட்டப் போகிறோம் என்று ஆரம்பித்தது கேரள அரசு.

நீதிமன்றம் - சட்டம் - தீர்ப்பு என்று போய்க் கொண்டிருந்த இந்த முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, பீதியைக் கிளப்பி, உணர்ச்சி மேலீட்டை கேரள மக்களுக்குத் தரவும், அங்கே வன்முறை வெடித்துக் கிளம்யுள்ளது.

நதிகளை நாட்டுடைமையாக்கி, அங்கே கட்டப்பட்ட அணைகளுக்கு அவசியம் வந்தால் மத்திய அரசு ஒப்புதல் - மேற்ப்பார்வை - மாநில அரசுகள் கலந்து ஆலோசித்து ஒத்துழைப்பு நல்கிய பிறகே கட்டலாம் என்று ஒரு சட்டத்தை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

நிலம் எப்படி அரசுக்கே சொந்தமோ அதுபோன்றே நீரும்கூட!

மத்திய அரசு அணையைப் பாதுகாக்கவும், புதிய அணைகளை அதன் ஒப்புதல் இல்லாமல் கட்டுவதைத் தடுப்பதற்கும் உடனடியாக முன்வருவது அவசர - அவசியம்!

தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பதைப்போல இதில் தமிழ்நாடு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டு தமிழக அரசுக்கு பலமாக நிற்கிறார்கள் என்பது உறுதி!

மத்திய அரசுக்கு மாநிலங்களைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இந்திய அரசியல் சட்டத்தில் 365 என்ற விதி உள்ளது என்பதை நினைவூட்டுவது நமது கடமை.

இதில் மத்திய அரசும் ஆளும் கட்சி மாநிலத்தில் எது என்ற கண்ணோட்டம் பாராது, நியாயத்தை நிரந்தரமாக்கும் போக்குடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கி. விரமணி கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்