முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிதிராவிட விடுதிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட நிதி

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.9 - 42 ஆதிதிராவிட விடுதிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பெருக்குவதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,254 ஆதி திராவிடர் நல விடுதிகளும், 40 பழங்குடியினர் நல விடுதிகளும், 296 பழங்குடியினர் அரசு உண்டி உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றிற்கு சொந்த கட்டடங்கள் கட்டப்படவேண்டும் என்று  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதன் அடிப்படையில், தற்பொழுது வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் 93 ஆதி திராவிட விடுதிகளுக்கு 46 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் சொந்தக் கட்டடம் கட்டிக் கொடுக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.  

தற்பொழுது சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு இடம் தயாராக உள்ள, வாடகை கட்டடங்களில் இயங்கி வரும் 42 விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட 21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதன்படி ஈரோடு மாவட்டம், பவானி, தர்மபுரி மாவட்டம், தீர்த்தமலை, காளிப்பேட்டை, மொரப்ர், தர்மபுரி, கரூர் மாவட்டம், புன்னம், கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் சந்தை, பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர், நெய்குப்பை, ஆதனூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டம், ரெகுநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, திருவாரூர் மாவட்டம், திருவாரூர், சவளக்காரன், புத்தாகரம், திருப்ர் மாவட்டம், சேவூர், திருவள்ளூர் மாவட்டம், கோலப்பன்சேரி, கண்டிகை, நாகப்பட்டினம் மாவட்டம், வெட்டியக்காடு, வேலூர் மாவட்டம், குடியாத்தம், விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு, காரியாப்பட்டி, விழுப்புரம் மாவட்டம், பனையபுரம், சேலம் மாவட்டம், ஆரகளுர், திருவண்ணாமலை மாவட்டம், மேலராணி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், எரக்குடி, திருத்தலையூர், தேனி மாவட்டம், பொம்மிநாயக்கன்பட்டி, கடமலைக்குண்டு, மயிலாடும் பாறை, ஆண்டிப்பட்டி, காமாட்சிபுரம், தூத்துக்குடி மாவட்டம், எம்.கே.நகர், கரிசல்குளம்பட்டி, மதுரை மாவட்டம், அச்சம்பட்டி, பரவை, ஊமச்சிக்குளம்,  மதுரை, ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம், பரமக்குடி ஆகிய 42 இடங்களிலுள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு சொந்த கட்டடம் கட்டப்படும்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர் மிகவும் பயன்பெறுவர்.  இதனால் பள்ளி, கல்லூரி செல்பவர்களின் எண்ணிக்கை கூடுதலாகும்.  இடையில் படிப்பினை விட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைவதற்கு வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்