முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் போட்டியில் சேவாக் சாதனை

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

இந்தூர், டிச.9 - மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் வீரேந்திர சேவாக் அதிரடியாக 219 ரன்களை குவித்து உலக சாதனை படைத்தார். இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி தொடரை வென்றது. மேற்கு இந்திய தீவுகள் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை ஏற்கனவே மேற்கு இந்திய தீவுகள் அணி இழந்துவிட்டது. இதையடுத்து 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் துவங்கியது. இதில் முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி கைப்பற்றியது. இதையடுத்து குஜராத்தில் நடைபெற்ற பரபரப்பான 3 வது ஆட்டத்தில் இந்திய அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2 - 1 என்ற நிலைக்கு கொண்டுவந்து தனது நிலையை மேற்கு இந்திய தீவுகள் அணி ஓரளவு ஸ்திரப்படுத்திக் கொண்டது. இதனால் நேற்று மத்தியபிரதேசத்தில் உள்ள இந்தூர் நகரில் நடைபெற்ற 4-வது ஒரு நாள் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

நேற்று பிற்பகல் இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் வீரேந்திரசேவாக் பேட்டிங்கை தேர்வு செய்தார். சேவாக்கும், காம்பீரும் துவக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். துவக்க வீரர்கள் இருவரும் 50 பந்துகளில் 50 ரன்களை குவித்தனர். இந்திய அணி முதல் 100 ரன்களை 87 பந்துகளிலேயே எடுத்தது. அப்போது காம்பீர் 44 ரன்களையும், சேவாக் 49 ரன்களையும் எடுத்திருந்தனர். இதையடுத்து சேவாக் தனது 50 ரன்களை 41 பந்துகளில் எடுத்தார். காம்பீர் தனது 50 ரன்களை 51 பந்தில் எடுத்தார். இந்த ஜோடியை பிரிக்கும் வழிதெரியாமல் திகைத்தது மேற்கு இந்திய தீவுகள் அணி. முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக இவர்கள் இருவரும் 150 ரன்களை குவித்தனர். 22 ஒரு நாள் போட்டிகளுக்கு பிறகு இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் இந்த போட்டியில்தான் பார்ட்னர்ஷிப்பாக 100 ரன்களை கடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  அணியின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்த நிலையில் காம்பீர் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். அவர் 67 பந்துகளில் 67 ரன்களை எடுத்திருந்தார். அடுத்ததாக சேவாக்குடன் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் மேற்கு இந்திய பந்துவீச்சை சிதறடித்தது. அதிரடியாக ஆடிய சேவாக் 69 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் ரெய்னா அரை சதம் கடந்தார்.

இந்த தொடரில் 3 போட்டிகளிலும் சரியாக விளையாடாத சேவாக் இந்த போட்டியில் அபாரமாக விளையாடி குவாலியரில் சச்சின் செய்த இரட்டை சத சாதனையை முறியடித்தார். 140 பந்துகளில் 200 ரன்களை குவித்தார் சேவாக். மேலும் 19 ரன்களை சேர்த்த சேவாக் 219 ரன்களில் பொல்லார்டு வீசிய பந்தில் மார்ட்டினால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சிறப்பாக ரன்களை குவித்ததால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 418 ரன்களை குவித்தது. இந்திய தரப்பில் ரெய்னா 55, ரவீந்திர ஜடேஜா10, ரோகித் சர்மா 27 ரன்களை எடுத்தனர். விராட் கோஹ்லி ஆட்டமிழக்காமல் 23 ரன்களையும், பார்த்தீவ் பட்டேல் 3 ரன்களையும் எடுத்திருந்தனர்.  இது இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் குவித்த அதிகபட்ச ரன்னாகும். 

இதையடுத்து 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு வைக்கப்பட்டது. ஆனால் அந்த அணியின் விக்கெட்டுகள் தொடர்ச்சியான இடைவெளியில் விழுந்துகொண்டே வந்ததால் எடுக்க வேண்டிய ரன் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வந்தது. அறிமுக வீரராக களமிறங்கிய ராகுல் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  மேற்கு இந்திய தீவுகள் அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களை எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ராம்தின் ஓரளவு சிறப்பாக ஆடி 96 ரன்களை எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சேவாக் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்