முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைபெரியாறு: தமிழக அரசின் செயல்பாடு சரியாகஉள்ளது-ராமகிருஷ்ணன்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சேலம் டிச.- 10  - முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசின் செயல்பாடு சரியாக உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் மாவட்ட 20 வது 3 நாள் மாநாடு துவக்க விழா நேற்று காலை நெத்திமேடு மாணிக்கம்மாள் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. அதில் கலந்து கொள்ள வந்திருந்த ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் கடந்த 7 மற்றும் 8 ந் தேதி சென்னையில் நடைப்பெற்றது. இதில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முல்லை பெரியாறு  அணை பிரச்சனையில் 1 பாசனத்திற்கு தண்ணீர் உத்திரவாதம், 2 அணை பாதுகாப்பு,3, 2 மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலையை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதாகும். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் 5 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த நிபுணர் குழு அணை பாதுகாப்பு குறித்தும், நிலநடுக்கத்தால் ஏதாவது பிரச்சனைகள் ஏற்படுமா? என்பது குறித்தும் ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யும் அதன்படி சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பை 2 மாநில அரசுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தற்போது சுப்ரீம் கோர்ட் அணையின் தண்ணீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அந்த தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு அணையின் தண்ணீர் மட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இது சரியான அணுகுமுறை அல்ல.தற்போது முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் 2 மாநில மக்களுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது. சில இடங்களில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக மாநில அரசுகள் பேச்சு வார்த்தை நடத்த தேவை இல்லை. 2 மாநில மக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் பதட்டத்தை தவிர்க்க 2 மாநில அரசுகளின் அதிகாரிகள் சந்தித்து பேசுவது நல்லது. இடுக்கி மாவட்ட கலெக்டரும்,தேனி மாவட்ட கலெக்டரும் மற்றும் காவல்துறை அதிகாரிகளும் நேரில் சந்தித்து பேச வேண்டும். தேனியில் வரும் 11 ந் தேதி 2 மாநில மக்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை பேணவும்,அணையின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் மார்க்சிஸ்ட் விவசாய சங்கம் சார்பில் 1 நாள் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. 

ஆரம்ப பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் கடந்த ஆட்சிகாலத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் நடைப்பெற்றது. தற்போது தமிழக அரசு தேர்வாணையம் மூலம் ஆசிரியர் நியமனம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே கடந்த ஆட்சிகாலத்தில் உள்ளது போல் ஆசிரியர் நியமனம் பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெற வேண்டும்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் வியாபாரிகள் நடத்திய கடை அடைப்பு போராட்டம் மற்றும் எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்காக தற்காலிகமாக அந்த திட்டத்தை கைவிட்டுள்ளது. அந்த திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும்.

முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியானது. இதில் எதிர்கட்சிகளும் ஒருமித்த கருத்துடன்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செளந்திரராஜன் எம்.எல்.ஏ.,சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடபதி மற்றும் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்