கேரள எல்லையை நோக்கி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

கூடலூர்,டிச.- 12 - முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையால் குமுளியை முற்றுகையிட நேற்று இரண்டாவது நாளாக கம்பம் பகுதி மக்கள் பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் தொடர்ந்து நீடிக்கிறது. முல்லைப்பெரியாறு பிரச்சினையால் கேரளாவையொட்டி உள்ள தமிழக எல்லையில் பதட்டத்தை தணிக்க கடந்த 7-ம் தேதி முதல் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கேரள சட்டசபையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கவும் புதிய அணை கட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் தேனி மாவட்ட மக்கள் திடீரென குதித்து எழுந்தனர். நேற்று முன்தினம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் போலீஸ் தடையை மீறி அணி திரண்டு குமளியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இரு சக்கர வாகனங்களில் பலர் சென்றனர். லோயர்கேம்ப் முன்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தென்மண்டல ஐ.ஜி.ராஜேஷ்தாஜ், கலெக்டர் பழனிசாமி ஆகியோர் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். இதனால் எல்லைக்கிராமங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. நேற்றுக்காலை மீண்டும் தேனி மாவட்ட மக்கள் கேரளாவை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் இருந்து 3 ஆயிரம் பேரும் கம்பம் ஒன்றியம் நாராயணதேவன் பட்டி, அணைப்பட்டி, கே.கே.பட்டியில் இருந்து 7 ஆயிரம் பேரும் திரண்டு கம்பம் சென்றனர். உத்தமபாளையும், கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர் ஆகிய பகுதிகளில் இருந்து கிராம மக்கள், அனைத்துக்கட்சி பிரமுகர்கள், விவசாய அணியினர் திரண்டு வந்தனர். வேன்கள், டிராக்டர்கள்,லாரிகளில் சென்றனர். ராயப்பன்பட்டியில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அணிவகுத்து வந்தனர். அங்கிருந்து அவர்கள் குமுளி நோக்கி பேரணியாக புறப்பட்டனர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகமானது நேற்று சுமார் 12 மணி அளவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். அவர்கள் கேரள அரசை கண்டித்தும் முல்லைப்பெரியாறு அணையை காக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். தமிழக கிராம மக்கள் நேற்றும் கேரள எல்லையை நோக்கி படை எடுத்து வருவதால் லோயர் கேம்பில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி.ராஜேஷ்தாஜ், டி.ஐ.ஜி.சஞ்சய் மாத்தூர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ராமநாதபுரம் உள்பட 6 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதிரடி போலீசாரும் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். திடீரென்று தமிழர்கள் வெகுண்டெழுந்து பேரணியாக வருவதால் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பீதி அடைந்த கேரள போலீஸ் அதிகாரிகள் எல்லைக்குள் நுழையும் தமிழர்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்டனர். கேரளாவை நோக்கி வரும் தமிழர்கள் குமுளி பகுதியில் நுழையாமல் இருக்க கேரள போலீசார் 3 ஆயிரம் போலீசார் துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் கேரள-எல்லைப்பகுதியில் எந்த நேரத்திலும் பெரிய மோதல் ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. கடந்த இருமாநில போலீசாரும் தங்கள் பகுதிகளில் நின்றவாறு நிலைமையை கண்காணித்து வருகிறார்கள். தேனி மாவட்டம் முழுவதும் நேற்று கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. சிறு கடைகள் கூட திறக்கப்படவில்லை.   

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: