முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் திருமறைநாத சுவாமி கோவிலில் சனிபெயர்ச்சி விழா சிறப்பாக நடந்தது

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

மேலூர், டிச.- 22 - மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள திருமறைநாதர் சுவாமி கோவிலில்  சனிப்பெயர்ச்சி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் துணை கோவில்களில் ஒன்று திருவாதவூரில் உள்ள திருமறைநாத கோவில் ஆகும். இங்கு தனி சன்னதியில் சனிபகவான் இடம் பெற்றுள்ளார். சிவ தியானத்தில் இருந்த மாண்டவ முனிவரை சனி பகவான் பீடித்து துன்புறுத்தியதால், சாபம் பெற்று முடமான சனிபகவான் திருவாதவூர் வந்து வழிபாடு செய்து சாபம் நீக்கப்பெற்றார். அவர் சாபம் நீங்க அருளிய தலமாதலால் இங்கு வீற்றிருக்கும் சனிபகவான் தன்னை வழிபடுபவர்களுக்கு தொல்லை நீக்கி நன்மைகள் தருகிறார். இத்தகைய சிறப்பு மிக்க சனிபகவானுக்கு நேற்று சனிப்பெயர்ச்சி தினத்தன்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. சனி பகவான் நேற்று காலை 7.51 மணியளவில் கன்னிராசியில் இருந்து உச்சவீடான துலாம் ராசிக்கு பெயர்ச்சி மேற்கொண்டார். இதில் மூன்றாம் பார்வையாக தனுசையும், 7ம் பார்வையாக மேஷத்தையும், 10ம் பார்வையாக கடகத்தையும் பார்க்கிறார். கீழ்க்கண்ட ராசிகளுக்கு எந்தெந்த சனி பிடிக்கும் என்றும் அதன் பரிகாரங்களும் பின்வருமாறு, மேஷராசிக்கு -கண்டசனி,கடகராசிக்கு -அர்த்தாஷ்டமசனி, கன்னிராசிக்கு -குடும்பசனி, துலாம்ராசிக்கு - ஜென்மசனி, விருச்சிகராசிக்கு- விரையசனி, மீனராசிக்கு -அஸ்டமத்துசனி பிடிக்கும். மேலே கண்ட ராசிகாரர்கள் வாரந்தோறும் சனிக்கிழமை விரதமிருந்து எல்லுதீபம் போட்டு சனிபகவானை தரிசனம் செய்தால் தோஷங்கள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் காணலாம். சனிப்பெயர்ச்சியின் போது அபிஷேகங்கள் பெரியபட்டர் வெங்கட்பட்டர் செய்தார். விழாவிற்கான ஏற்பாடுகள் இணை ஆணையாளர் ஜெயராமன், பேஷ்கார் மற்றும் திருக்கோவில் அதிகாரிகள் செய்திருந்தனர். விழாவிற்கு மேலூர், மதுரை, திருப்புவனம், சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சனிபகவானை தரிசனம் பெற்று சென்றனர். விழாவிற்கு மேலூர் டி.எஸ்.பி. மணிரத்தினம், இன்ஸ்பெக்டர் மாடசாமி, எஸ்.ஐ.க்கள் ரவி, அய்யனன் ஆகியோர் சிறப்பான பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்