முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக் அரசியல் தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

ஐ.நா., டிச.- 22 - ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியுள்ள நிலையில் ஈராக் அரசியல்  தலைவர்கள் தங்கள் நாட்டு பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈராக் மீது படையெடுத்த அமெரிக்கா, அந்நாட்டை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. சுமார் 8 ஆண்டுகள் ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகள் கடந்த மாதம் முதல் வாபஸ் பெறப்பட்டு வந்தது. ஈராக்கில் இருந்த கடைசி அமெரிக்க படை பிரிவும்கூட இந்த மாத கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈராக்கை விட்டு வெளியேறியது. இப்போது ஈராக் முழுக்க முழுக்க அந்நாட்டு தலைவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் ஈராக் அரசியல் தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். ஈராக்கில் தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அந்நாட்டில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி அதன் மூலம் தீர்வுகாண முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறி விட்டன. ஈராக்கின் அண்மை வரலாற்றில் இது ஒரு புதிய திருப்பமாக அமைந்துள்ளது. எனவே ஈராக் அரசியல் தலைவர்கள் ஜனநாயக முறையில் தங்கள் நாட்டு பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும் என்று பான் கி மூன் கேட்டுக்கொண்டுள்ளார். ஒரு சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வகையில் ஈராக் மக்களுக்கும் உலக மக்களுக்கும் ஒரு நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஈராக் தலைவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது என்றும் அவர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். ஈராக் தலைவர்கள் தங்களது கருத்து வேறுபாடுகளை தீர்க்க ஒருவருக்கொருவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். ஈராக்கில் ரசாயன உயிர்க்கொல்லி ஆயுதங்கள் உள்ளதாக குற்றம் சாட்டி அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜார்ஜ்புஷ் காலத்தில் ஈராக் மீது அமெரிக்க படைகள் தாக்குதலை தொடுத்தன. ஆனால் அங்கு அத்தகைய கருவிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்