முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காற்றழுத்தம் புயலாக மாறுகிறது: இன்று முதல் மழை!

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.27 - வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது புயலாக மாறக் கூடிய வாய்ப்புகள் இருப்பதால் இன்று முதல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தென் கிழக்கு வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையானது நேற்று இரவு ஒரு தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றது. நேற்று காலை 5. 30 மணி நிலவரப்படி அது மேலும் வலுப்பெற்று தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது. இது தற்போது சென்னையிலிருந்து 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இலங்கை மற்றும் தமிழகத்தை நோக்கி இது நகரத் தொடங்கியுள்ளது. இரவுக்குள் இது புயலாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் போக வேண்டாம் என்றுகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடலில் காற்றும் பலமாக வீசும். இன்று முதல் தமிழகத்தின் வட பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தில் மழை பெய்யத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவுள்ள இந்தப் புயலானது தொடர்ந்து மேற்கு வட மேற்குத் திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே, கடலூர் மற்றும் நெல்லூர் இடையே 29-ம் தேதி அதிகாலையில் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளை முதல் 29-ம் தேதி வரை தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony