முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவிகுளம், பீர்மேட்டை தமிழகத்துடன் இணைக்க வேண்டும்

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,டிச.27 - முல்லைப்பெரியாறு பிரச்சினைகளை தீர்க்க கேரளத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு தாலூகாக்களை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மதுரையில் தெரிவித்தார்.

   இது குறித்து அவர் மதுரையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பெரியாறு அணை பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 142 அடியாக நீர்மட்டத்தை உயர்த்த வேண்டுமென்று கடந்த 1995ம் வருடத்தில் மூவேந்தர் முன்னேற்றக்கழகம் சார்பில் முதன்முதலாக எனது தலைமையில் கீழவளவு கிராமத்தில் இருந்து மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி வழியாக கம்பம் வரை 220 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மத்திய அரசை வலியுறுத்தினோம். ஆனால் இன்று வரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமுல்படுத்தப்படவில்லை. தற்போது முல்லைப்பெரியாறு அணையை உடைப்போம் என்று கேரளத்தில் உள்ளவர்கள் ஒரு தவறான வாதத்தை முன்வைத்து போராட்டம் நடத்துவது கேலிக்கூத்தாக உள்ளது. அணையை பாதுகாக்க மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பரித்து எழுந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் கேரள, தமிழக மக்களுடனான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் கேரள அரசு புதிய அணையை கட்டுவோம் என்று கூறுவதை மத்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. மொழி வாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, முல்லைப்பெரியாறு அணை இருக்ககூடிய பகுதியை தமிழகத்துடன் இணைத்திருக்க வேண்டும். இப்போதாவது அணை இருக்க கூடிய தேவிகுளம், பீர்மேடு தாலூகாக்களை உடனடியாக தமிழகத்துடன் இணைக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும். அணைக்கு தற்போது கேரள போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இதனால் கேரளாவில் உள்ள பல்வேறு அரசியல் வாதிகள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் ஏதோ பிக்னிக் செல்வதை போல பெரியாறு அணைக்கு சென்று அணையின் பலத்தை பரிசோதிக்கிறோம், பார்வையிடுகிறோம் என்று சென்று வருகிறார்கள். எனவே பெரியாறு அணையின் பாதுகாப்பு பணியை மத்திய காவல் படையிடம் ஒப்படைக்க வேண்டும். அணையில் தங்கி இருக்கின்ற தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணை இப்போதும் வலுவாக உள்ளது. அப்படி உள்ள நிலையில் நூறாண்டு காலம் நிறைவுற்ற பெரியாறு அணை அதைவிட வலுவாகவே உள்ளது. எனவே அணையின் நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்த மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை மறுத்தால் கேரள அரசின் மீது மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்