அன்னா ஹசாரே 3 நாள் உண்ணாவிரதம் துவக்கினார்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

மும்பை, டிச.28 - வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி சமூக சேவகர் அன்னா ஹசாரே நேற்று 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார். இவர் ஏற்கனவே இந்த வலுவான மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி டெல்லியில் ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.இவரது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக கூறிய மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றுவோம் என்று உறுதி அளித்தது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களையும்,  மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யையும் சேர்க்க வேண்டும் என்று அன்னா ஹசாரே தலைமையிலான குழுவினர் வற்புறுத்தி வந்தனர். தங்களது கோரிக்கைகளை இந்த லோக்பால் மசோதாவில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அன்னா குழுவினர் கோரி வந்தனர். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாதான் வேண்டும் என்றும் பலவீனமான மசோதா வேண்டாம் என்றும் இவர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 22 ம் தேதி பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது. 

இந்த கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதன்படி ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு அது பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. 

பிறகு இந்த மசோதாவுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு அந்த மசோதா பாராளுமன்றத்தின் லோக் சபையில் கடந்த 22 ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.

லோக்பால் மசோதாவை இந்த கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றுவதற்கு வசதியாக குளிர்கால கூட்டத்தொடரை மேலும் சில நாட்களுக்கு நீட்டித்துக்கொள்ளலாம் என்று  அன்னா ஹசாரே கூறியிருந்தார்.

இந்த கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார். லோக் சபையில் தாக்கல் செய்யப்பட்ட லோக்பால் மசோதா மீதான விவாதம் நேற்று தொடங்கியது. இந்தநிலையில் வலுவான லோக்பால் மசோதா கோரி அன்னா ஹசாரே நேற்று மும்பையில் 3 நாள் உண்ணாவிரதப்போராட்டத்தை துவக்கினார். 

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா வலுவானதாக இல்லை என்றும் அதனால்தான் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படுகிறது என்றும் அன்னா ஹசாரே கூறியிருந்தார். மும்பையில் எம்.எம்.ஆர்.டி. ஏ.மைதானத்தில் திரளான மக்கள் கரகோஷம் முழங்க அன்னா ஹசாரே நேற்று தனது 3 நாள் உண்ணாவிரதத்தை  தொடங்கினார்.

திறந்த டிராக்டரில் கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி மைதானத்திற்கு வந்த அவருக்கு அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.

வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் ஹசாரே இந்த உண்ணாவிரதத்தை  தொடங்கி மத்திய அரசுக்கு தனது பலமான எதிர்ப்பை தெரிவித்தார். ஹசாரே உண்ணாவிரதம் தொடங்குவதை முன்னிட்டு பந்த்ரா குர்லா வளாகத்தில் அவரது  ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். ஹசாரேவின் நெருங்கிய ஆதரவாளர்களான அர்விந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, மணீஷ் திதோதியா, ஆகியோரும் டிராக்டரில் ஹசாரேவுடன் ஊர்வலமாக மைதானத்திற்கு வந்தபோது பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம் போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

வந்தேமாதரம், இன்குலாப் ஜிந்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பியவாறே ஹசாரே  தனது உண்ணா நோன்பை துவக்கினார். ஜூஹூ கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு ஊர்வலமாக மைதானத்திற்கு வந்த ஹசாரே,  தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக மைதானத்தை வந்தடைய  இரண்டரை மணி நேரம் பிடித்தது. 

சாந்தா குரூஸ், துலீப் ஸ்டார் ஹோட்டல், மித்திபாய் கல்லூரி, எஸ்.வி.ரோடு, விலே பூங்கா, பந்த்ரா நெடுஞ்சாலை வழியாக இந்த பேரணி எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்திற்கு ஆரவாரத்துடன் வந்து சேர்ந்தது. 

விருந்தினர் மாளிகையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட டிரக் ஒன்றில் ஹசாரே வந்தார்.

அப்போது கூடியிருந்த திரளான மக்களை பார்த்து தனது கைகளில் இருந்த தேசிய கொடியை அசைத்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்த பேரணி வந்து கொண்டிருந்தபோது சுமார் 20 பேர் அடங்கிய ஹசாரே எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹசாரேவுக்கு கறுப்புக்கொடிகளை காட்டி தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.

ஏற்கனவே டெல்லியில் நடத்துவதாக இருந்த இந்த உண்ணாவிரதத்தை வானிலை காரணமாக ஹசாரே மும்பைக்கு மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை முன்னிட்டு மும்பை மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

இந்த பாதுகாப்பு பணியில் 200 சப் இன்ஸ்பெக்டர்களும் 2000 போலீசாரும்  ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: