முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையை மிரட்டும் `தானே' புயல்: மழை எச்சரிக்கை

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.28 - வங்க கடலில் உருவாகி உள்ள `தானே' புயல் சென்னையை மிரட்டி வருகிறது. இன்று முதல் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது. அந்த பயங்கர புயல் 30-ந் தேதி கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிக அளவு பெய்துள்ளது. டிசம்பர் மாத இறுதியில் மழை முடிவடையும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலையில் திடீரென புதிய புயல் உருவாகி உள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே 900 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்த அந்த புயல் நேற்று காலை 800 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது மெதுவாக வடமேற்கு திசையில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. தானே புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் என்றும், புயல் சின்னம் காரணமாக 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

புயல் தீவிரம் அடைந்து வருவதால் கடலூர், பாம்பன் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், ராமேஸ்வரம், நாகப்பட்டினத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் வழக்கத்தைவிட உயரமாக எழும்புகின்றன. நேற்று முன்தினம் இரவு சில கடலோர மீனவ கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பலத்த காற்று வீசுவதாலும் ராட்சத அலைகள் எழும்புவதாலும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக இன்று முதல் தமிழ்நாட்டின் வடக்கு கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் மிக பலத்த மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய இயக்குநர் ரமணன் எச்சரித்துள்ளார்.  

தானே புயல் 30-ந் தேதி கடலூருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும் இடையே கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புயல் நகரும் வேகத்தை வைத்து அது இன்னும் 2 நாட்களில் கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் புயலின் வேகம், செல்லும் திசை ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட்டால் கரையை கடக்கும் காலம், இடம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார் ரமணன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony