முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனரிடம் சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி

திங்கட்கிழமை, 14 மார்ச் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.15 - ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி பணம் கைமாறிய விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி ஆகியோரிடம் டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு  அண்ணா அறிவாலயத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். நேற்று  கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமாரிடம் டெல்லியில் சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியது.  

உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என்று வர்ணிக்கப்படுவதுதான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல். இந்த ஊழல் பற்றி உலகம் முழுவதும் பேசப்படுவதற்கு காரணம், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட பெரும் தொகைதான். இந்த முறைகேட்டால் இந்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்து  தணிக்கை குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது. இதற்கு அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவே முழுப் பொறுப்பு என்றும் அக்குழுவின் தலைவர்  வினோத்ராய் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதன்  பிறகுதான் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தி குளிர்கால கூட்டத் தொடரையே நடக்கவிடாமல் முடக்கி வைத்தனர். இதன் எதிரொலியாக இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பதவி விலகினார். அவர் பதவி விலகினால் போதாது. அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் போர்க்கொடி உயர்த்தின. அந்த நேரத்தில் சுப்ரீம்கோர்ட்டும் தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் பிரதமருக்கும் சுப்ரீம்கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. சுப்ரீம்கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. இந்த ஊழலை விசாரித்து வருகிறது. பதவி விலகிய ராசாவின் வீடுகள், அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக ராசா கைது செய்யப்பட்டு அவரிடம் 14 நாட்கள் சி.பி.ஐ.விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் சுவான் டெலிகாம் நிர்வாகி பால்வா கைது செய்யப்பட்டார். ராசா கைது செய்யப்பட்டபோது அவருடன் சேர்த்து 2 முன்னாள் மத்திய செயலாளர்களும் கைது செய்யப்பட்டார்கள். 

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் அம்பலத்திற்கு வந்தன. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு குறிப்பிட்ட தொகை அதாவது ரூ. 214 கோடி கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாறிய விவகாரமும் அம்பலமானது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட டி.பி.ரியால்டி நிறுவனம் மூலமாக கலைஞர் டி.வி.க்கு பணம் போய் சேர்ந்த விவகாரம் அம்பலமானது. கலைஞர் தொலைக்காட்சியில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோர் பங்கு தாரர்களாக உள்ளனர். மற்றொரு பங்குதாரர் சரத்குமார் ரெட்டி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவர்களிடம் எந்த நேரமும் விசாரணை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதன் காரணமாகவோ என்னவோ காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் கருணாநிதி முன்வந்தார். மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகப்போவதாகவும் தி.மு.க. உயர்நிலைக்குழுவை கூட்டி மிரட்டிப்பார்த்தார் கருணாநிதி. ஆனால் காங்கிரஸ் மேலிடம் அதற்கு பணிந்ததாக தெரியவில்லை. கடைசியில் தி.மு.க.தான் பணிய நேர்ந்தது. காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகளை கொடுக்க முடியாது என்று முதலில் மறுத்த தி.மு.க., 3 நாட்களுக்கு பிறகு காங்கிரஸ் கேட்ட அதே தொகுதிகளை கொடுக்க முன்வந்தது. ஆனால் திரைமறைவில் பல சம்பவங்கள் அரங்கேறின. ஒரு வழியாக மீண்டும் கூட்டணி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கனிமொழியிடம் எந்த நேரமும் விசாரணை நடக்கலாம் என்று தினபூமி உள்பட  பல நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.

அதன்படி சில தினங்களுக்கு முன்பு கனிமொழியிடமும், தயாளு அம்மாளிடமும்  சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இந்த கிடுக்கிப்பிடி விசாரணை நடந்தது.

இந்தநிலையில் கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரை விசாரணைக்கு வரும்படி சி.பி.ஐ. அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் நேற்று காலை 11 மணிக்கு  டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திற்கு சரத்குமார் வந்தார். அப்போது அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள். சினியுக் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் கலைஞர் டி.வி.க்கு கைமாறிய ரூ. 214 கோடி குறித்து சரத்குமாரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு எதற்காக கொடுக்கப்பட்டது. அது ஏன் பின்னர் வட்டியுடன் திருப்பி கொடுக்கப்பட்டது என்பது குறித்து பல்வேறு கேள்விக்கணைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தொடுத்தனர். மேலும் கலைஞர் டி.வி.க்கு பணம் கைமாறியதில் ஷாகித் பால்வா என்பவரால் உருவாக்கப்பட்ட டி.பி.ரியால்டி என்ற நிறுவனத்திற்கு உள்ள பங்கு குறித்தும் சி.பி.ஐ. அதிகாரிகள் சரத்குமாரிடம் விசாரணை நடத்தினர். 

கலைஞர் டி.வி.யில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கனிமொழிக்கு 20 சதவீதமும், நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீதமும் பங்குகள் உள்ளன. கடந்த வாரம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் டி.வி. அலுவலகத்தில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், சரத்குமாரிடமும் விசாரணை நடத்தினார்கள்.  நேற்று இெரண்டாவது முறையாக டெல்லியில் வைத்து சரத்குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.   

ஷாகித் பல்வா குடும்பத்தினரை இயக்குனர்களாகவோ அல்லது பங்குதாரர்களாகவோ கொண்ட டி.பி.குழுமத்திடம் இருந்து சினியுக் பிலிம்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தொகையான ரூ. 214 கோடிதான் கலைஞர் டி.வி.க்கு கைமாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணம் கலைஞர் டி.வி. பங்குகளை பெறுவதற்காக சினியுக் பிலிம்ஸ் அட்வான்சாக கொடுத்தது என்றும் ஆனால் அந்த பணம் பிறகு வட்டியுடன் கொடுக்கப்பட்டு விட்டது என்றும் சரத்குமார் ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் இந்த பணம் எதற்காக கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்த உண்மைகளை கண்டறியவே சரத்குமாரிடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். சரத்குமாரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது டெல்லி மற்றும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்