லோக்பால் மசோதாவை பா.ஜ. விரும்பவில்லை: கபில் சிபல்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.28 - லோக்பால் மசோதாவை பாரதிய ஜனதா விரும்பவில்லை என்றும் இந்த மசோதா விஷயத்தில் பாரதிய ஜனதா மலிவான அரசியல் நடத்துகிறது என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கடுமையாக குற்றஞ்சாட்டினார். லோக்சபையில் நேற்று லோக்பால் மசோதா மீது விவாதம் தொடங்கியது. விவாதத்தின் ஆரம்பமே சூடாக இருந்தது. ஊழலை ஒழிக்க இந்த லோக்பால் மசோதா மிகவும் சிறந்தது என்று மத்திய அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து பேசிய முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, இந்த மசோதாவில் உள்ள அனைத்தும் குறைபாடுகளாக இருக்கின்றன. அதனால் இந்த மசோதாவை வாபஸ் வாங்க வேண்டும் என்று கூறியது. 

லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசினார். அப்போது அவர் கூறுகையில் மத்திய அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில் எதுவும் உருப்படியாக இல்லை. இந்த மசோதா முற்றுப்பெறாமல் இருக்கிறது. இதனால் மசோதாவால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை என்றார். ஊழலை ஒழிக்க வகை செய்யும்படி உள்ள மசோதாவை தாக்கல் செய்யும்படி மத்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த மசோதா நமது எதிர்பார்ப்புப்படி இல்லை. இது அரசியல் சட்டத்தை மீறும்படி உள்ளது என்று சுஷ்மா சுவராஜ் மேலும் கூறினார். 

இதற்கு காங்கிரஸ் சார்பாக பதில் அளித்து கூறிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், லோக்பால் மசோதாவை பாரதிய ஜனதா விரும்பவில்லை. இந்த விஷயத்தில் பாரதிய ஜனதா மலிவான அரசியல் நடத்துகிறது. சுஷ்மா சுவராஜின் விவாதத்தில் அர்த்தம் எதுவும் இல்லை. லோக்பால் மசோதா நிறைவேறாவிட்டால் பாரதிய ஜனதாவை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இந்த மசோதா ஊழலை ஒழிக்கும். அதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: