பாராளு மன்றத்திற்கு நெருக்கடி கொடுப்பது சரியா?

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

மும்பை,டிச.28 - லோக்பால் மசோதா மீது விவாதம் நடந்து கொண்டியிருக்கும்போது பாராளுமன்றத்திற்கு நெருக்கடி கொடுப்பது சரியா? என்று அண்ணா ஹசாரேவுக்கு மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் முதல்வர் பிரித்விராஜ் சவாண் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்ற லோக்சபையில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடந்துகொண்டியிருக்கிறது. இந்தநிலையில் தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதா வலுவானதாக இல்லை என்றும் அதில் பல திருத்தங்களை செய்ய வேண்டும் என்று கோரி பிரபல சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நேற்று முதல் மும்பையில் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். இதற்கு முதல்வர் சவாண் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா மீது விவாதம் நடந்து கொண்டியிருக்கிறது. மறுபக்கம் நீங்கள் உண்ணாவிரதத்தை தொடங்கி பாராளுமன்றத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கிறீர்கள். இது சரியா என்பதை நீங்களே ஆத்ம பரிசோதனை செய்து பாருங்கள் என்று சவான் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயகத்தில் பாராளுமன்றம்தான் சட்டத்தை இயற்றும் என்பதை நாம் மறக்கவே கூடாது. பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா மீது விவாதம் நடக்கும் வரை ஹசாரே பொறுத்திருந்திருக்க வேண்டும். விவாதம் முடிந்த பின்னர் அவர் உண்ணாவிரதத்தை தொடங்கியிருக்கலாம். சட்டவிதிகளின்படி ஹசாரேயின் உண்ணாவிரதத்திற்கு அனைத்து உதவிகளையும் மாநில அரசு கொடுக்கும். ஹசாரேயின் உண்ணாவிரதம் அமைதியாக நடக்கும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் ஏற்படாது என்றும் சவாண் நம்பிக்கை தெரிவித்தார்.

மும்பையில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் சவாண் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: