ஹசாரேவின் உண்ணாவிரதம் பாதியில் நிறுத்தப்பட்டது

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

மும்பை, டிச.29 - ஊழலுக்கு எதிராக 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்ட அன்னா ஹசாரேவின் உடல்நிலை மோசமடைந்ததன் காரணமாக உண்ணாவிரதப் போராட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரபல சமூக சேவகர் அன்னா ஹசாரே நேற்று முன்தினம் மும்பையில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் 3 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். நேற்று முன்தினம் மாலையிலேயே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடர்ந்து மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தினர். அப்படி மீறி உண்ணாவிரதத்தை மேற்கொண்டால் அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர். இதையடுத்த அன்னா ஹசாரே 2 வது நாளான நேற்று மாலை தனது உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டார். உண்ணாவிரதத்தின் முதல்நாள் அன்று நாலாயிரம் பேர் அந்த மைதானத்தில் திரண்டிருந்தனர். ஆனால் இரண்டாவது நாளான நேற்று காலையில் வெறும் 200 பேர் மட்டுமே ஹசாரேவைச் சுற்றி அமர்ந்திருந்தனர். 

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நேற்று முன்தினம் பாராளுமன்றத்தின் லோக்சபையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதா ராஜ்யசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. போதுமான மெஜாரிட்டி இல்லாத காரணத்தினால் இந்த மசோதா ராஜ்யசபையில் நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் ஹசாரே தனது 3 நாள் உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டுள்ளார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிரான தனது போராட்டம் தொடரும் என்றும், எம்.பி.க்கள் வீடுகள் முற்றுகை, சிறை நிரப்பும் போராட்டம் என்று தொடர்ந்து பல போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் ஹசாரே கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: