முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3000 புதிய பேருந்துகள் வாங்க முதல்வர் உத்தரவு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.29 - அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு பேருந்துகள் மிகவும் பழுதுபட்டு இருப்பதால் 3000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.75 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயும், பழைய பேருந்துகளை புதுப்பிக்க 97 கோடியே 58 லட்ச ரூபாயும் மொத்தம் 172 கோடியே 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தில் போக்குவரத்து சேவை முக்கிய பங்கு வகிக்கிறது.  நகர், புறநகர், மலைப்பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் போக்குவரத்து சேவை அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.  அண்டை மாநிலங்களான ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரிக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  அரசு போக்குவரத்துத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருகின்றன.  

இப்போக்குவரத்துக் கழகங்கள் 21,169 பேருந்துகளை இயக்குவதன் மூலம் தேசிய அளவில் மிகப் பெரிய போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களாக விளங்குகின்றன. நாளொன்றுக்கு 2.10 கோடி பயணிகள் பயணிக்கின்றனர்.  சென்னை பெருநகரப் பகுதியில் மட்டும்,  நாளொன்றுக்கு 55 லட்சத்திற்கும் மேல் பயணிகள் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கின்றனர். அரசு போக்குவரத்துக் கழகங்களின் பழுதுபட்ட பேருந்துகளால், பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இவற்றை சீர்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், புதிய பேருந்துகளை வாங்கிடவும்,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதன் அடிப்படையில், 6 வருடங்கள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்பட்ட பழைய பேருந்துகளுக்கு மாற்றாக, 434 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் 3,000 புதிய பேருந்துகளை வாங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இதன்படி, முதற்கட்டமாக 520 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 75 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வழங்கி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மக்களின் குடியேற்றம் காரணமாக, மாநிலத்தின் கிராமம் மற்றும் நகர்ப் பகுதிகள்  நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றன. போக்குவரத்து ஒன்றே, விரிவடையும் பகுதிகளை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பாலமாக விளங்குகிறது. எனவே, பெருகி வரும் மக்களின் போக்குவரத்து தேவைகளை, புதிய பேருந்துகள் வாங்குவதினால் மட்டுமே ர்த்தி செய்ய இயலாது என்பதாலும், மக்களின் தேவைகளை முழுமையாக ர்த்தி செய்ய அதிக அளவு புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு நிதிநிலைமை ஏற்புடையதாக இல்லை என்பதாலும், நல்ல நிலையில் உள்ள எஞ்சின் மற்றும் அடிச்சட்டம் ஆகியவற்றை வீணாக்காமல் பயன்படுத்துவது சீரிய நடவடிக்கையாக அமையும் என்பதாலும், வயது முதிர்ந்த மற்றும் பழுதடைந்த  பேருந்துகளில் அடிச்சட்டம் மற்றும் எஞ்சின் நல்ல நிலையிலுள்ள பேருந்துகளை கண்டறிந்து,  அவைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் அடிப்படையில்,  முதற்கட்டமாக 1,432 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.  இவற்றை 97 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்துத் துறையில் எடுக்கப்படும் இந்நடவடிக்கைகளினால், தமிழக மக்கள் சிறந்த போக்குவரத்து வசதிகளை பெறுவதற்கு ஏதுவாகும். 

இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்