முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரியில் கடல் 10 அடி தூரம் உள் வாங்கியது

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

கன்னியாகுமரி,டிச.29 - கன்னியாகுமரியில் 10 அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதனால் மண் திரட்டுகளும், பாறைகளும் காணப்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. 2004 ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதற்கு பின்னர் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் கடலில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்தாலோ அல்லது அலை சீற்றம் நிகழ்ந்தாலோ மீனவர்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்படுவதுண்டு. இந்த நிலையில் நேற்று முன்தினம் சுனாமி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அன்றைய தினம் கடல் அலை சீற்றம் இன்றி அமைதியாக இருந்தது. அன்று மாலை கன்னியாகுமரியில் அரபிக்கடல்,வங்காளவிரிகுடா கடல், இந்திய பெருங்கடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை பகுதியில் அலையே இல்லாமல் கடலின் நிறம் மாறி குளம் போல் காட்சியளித்தது. அதே கடலின் கிழக்கு திசையிலுள்ள வங்காளவிரிகுடா கடலிலும், மேற்கு திசையில் அரபிக்கடலிலும் அலைகள் வழக்கம் போல் அதிகமாக காணப்பட்டது. நேற்று கடலில் கிழக்கு திசையில் கரையிலிருந்து 10 அடி தூரத்திற்கு கடல் உள் வாங்கியிருந்தது. அந்த பகுதியில் நீர் இன்றி மண் திரட்டுகளும், பாறைகளும் காணப்பட்டது. பாறையில் பாசிகள் படர்ந்து காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர். கடல் உள் வாங்கியிருந்ததை சுற்றுலாபயணிகள் பக்தர்களும் அச்சத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்த்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!