ரஷ்ய தூதருடன் எஸ்.எம். கிருஷ்ணா சந்திப்பு

புதன்கிழமை, 28 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி,டிச.28 ​- ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடர்ந்திருப்பதற்கு இந்தியா பெரும் கவலையை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர் கதகினை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா சந்தித்து இந்த கவலையை தெரிவித்தார்.  ரஷ்யாவில் உள்ள இந்து அமைப்பு சார்பாக பகவத் கீதை உரை எழுதப்பட்டுள்ளது. இந்த உரை விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில் பகவத் கீதை உரைக்கு தடை விதிக்கக்கோரி அங்குள்ள கிறிஸ்தவ அமைப்பு ஒன்று ரஷ்யாவில் மிகவும் குளிர்பிரதேசமான ஷைபீரியா மாகாண கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இந்துமத அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஷைபீரியாவில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதனையொட்டி இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டரை நேற்று டெல்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா சந்தித்து, ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடைவிதிக்கக்கோரி தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு இந்தியாவின் கவலையை தெரிவித்தார். இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ரஷ்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பகவத் கீதைக்கு தடைகோரி தொடரப்பட்டுள்ள வழக்கால் இந்திய மக்களின் உணர்வு தூண்டப்பட்டுள்ளது. இந்திய மக்கள் குறிப்பாக இந்துக்கள் பெரும் கவலையுடன் இருக்கிறார்கள் என்று அமைச்சர் கிருஷ்ணா எடுத்துக்கூறினார். இதற்கு பதில் அளித்த ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டர், இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண ரஷ்ய அரசு தனக்குள்ள அதிகாரம் அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்றார். சமீபத்தில் ரஷ்யாவுக்கு பிரதமர் மன்மோகன் சென்றிருந்தது குறித்தும், இந்தியாவுக்கு ரஷ்யா நீர்மூழ்கி கப்பல் சப்ளை செய்வது குறித்தும் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. பகவத் கீதைக்கு தடை கோரும் விவகாரமாக ரஷ்ய தூதர் அலெக்ஸாண்டரை இந்திய முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி சந்தித்து இந்தியாவின் கவலையை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: