முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வீரர் யூகி பாம்ரியிடம் ஸ்லோவாகிய வீரர் அதிர்ச்சி தோல்வி

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ஜன.- 3 - சென்னையில் நேற்று துவங்கிய சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்லோவாகிய வீரர் கரோல் பெக், இந்திய வீரர் யூகி பாம்ரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.டி. சர்வதேச டென்னிஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. இதில் ஒற்றையருக்கான முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் யூகி பாம்ரி ஸ்லோவாகிய வீரர் கரோல் பெக்கை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இந்தியவீரர் பாம்ரி மிக அபாரமாக விளையாடி 6க்கு2 6க்கு3 என்ற நேர் செட்டுகளில் எளிதில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். உலகின் முன்னணி வீரர்கள் வரிசையில் ஒற்றையரில் 101 ரேங்க் பெற்றுள்ள பெக், சென்னை ஓபன் போட்டியில் வைல்டு கார்டு அனுமதி பெற்று மெயின்டிராவுக்கு தகுதி பெற்ற யூகி பாம்ரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து முதல் சுற்றிலேயே பரிதாபமாக வெளியேறினார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் இளம் நட்சத்திரம் விஷ்ணு வர்தன், குரோஷிய வீரர் இவான்  டோடிக்கை எதிர்கொண்டார். உலக ரேங்கிங்கில் 36வது இடமும், சென்னை ஓபனில் 5வது ரேங்க் வீரராக இடம்பிடித்துவரும்  இவான் டோடிக்கை விஷ்ணு வர்தன் திக்குமுக்காடச்செய்தார். முதல் செட்டை விஷ்ணு வர்தன் 6க்கு4 என்ற கேம்களில் எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2வது செட்டில் டோடிக் மிக நெருக்கடி கொடுத்தார். ஒரு கட்டத்தில் விஷ்ணு வர்தனே இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்த சமயத்தில் டோடிக் தனது முழு பலத்தையும், அனுபவத்தையும் பிரயோகித்து ஆடி, விஷ்ணுவின் வெற்றியை தட்டிப்பறித்தார். இதன் பிறகு இருவருக்குமே கடும் சவால் இருந்தது. ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்ற பாணியில் இருவருமே கடுமையாக போராடினர். எனவே, இந்த 2வது செட் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுத்தச்சென்று அதில் 10க்கு8 என்ற புள்ளிகளில் டோடிக் வென்று 1க்கு1 என்ற செட் சமநிலையை ஏற்படுத்தினார்.
எனவே, இருவரில் 2வது சுற்றுக்கு யார் முன்னேறுவது என்பதனை நிர்ணயிக்க 3வது செட் ஆட்டம் நடந்தது. இதில் விஷ்ணு வர்தன் போராடினாலும், டோடிக் தனது சோர்வான ஆட்டத்திலும் பிரதிபலித்து 6க்கு1 என எளிதில் 3வது செட்டை கைப்பற்றினார். ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் நடந்த போராட்டத்தின் முடிவில் இவான் டோடிக் 4க்கு6, 7க்கு6, 6க்கு1 என்ற கேம்களில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கடுமையாக போராடி விளையாடிய விஷணுவர்தனுக்கு ரசிகர்களின் பாராட்டு அதிகமாகவே இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்