முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதானியின் ஜாமீன் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜன. - 4 - கர்நாடக மாநிலம் பெங்களூர், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் கடந்த 2008 ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கேரளத்தை சேர்ந்த அப்துல் நாசர் மதானியின் ஜாமீன் மனு கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நேற்று நிராகரித்தது.  இந்த வழக்கில் தன்னை ஜாமீனில் விட வேண்டும் என்று அப்துல் நாசர் மதானி கோரியிருந்தார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பி. சதாசிவம், ஜே. ஷெலாமேஸ்வர் ஆகிய நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதிகள் மதானியின் கோரிக்கையை நிராகரித்து விட்டனர். இருந்தாலும், மதானிக்கு மருத்துவ சிகிச்சை வழங்குமாறு நீதிபதிகள் கர்நாடக அரசை கேட்டுக் கொண்டனர்.  ஜாமீன் மனு கோரிய மதானி கேரளத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனர் ஆவார். இவர் தற்போது பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். அந்த அடிப்படையில் தன்னை ஜாமீனில் விடுமாறு அவர் கோரியிருந்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் பெங்களூரில் உள்ள கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு மட்டும் அனுமதித்தது. முன்னதாக மதானி சார்பாக ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் சுஷில்குமார், மதானிக்கு கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஏதுவாக அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி வாதாடினார். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்து விட்டனர்.
இருப்பினும் பெங்களூரில் மருத்துவ சிகிச்சை வழங்க அவர்கள் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கில் மதானி சார்பாக ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் சுஷில்குமார், மதானியை இந்த வழக்கில் தவறான முறையில் சிக்க வைத்து விட்டார்கள் என்று கூறி அவர் கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் ஒன்பதரை ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, எனவே அவர் அப்பாவி என்றும் வாதாடினார். அத்தோடு அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் சுஷில்குமார் கேட்டுக் கொண்டார். மேலும் மதானி முதுகு தண்டு பிரச்சினையால் அவதிப்படுவதாகவும், அவரது கால்களில் பாதிப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.  ஆனாலும் இவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக அந்த வாதமும் அமையவில்லை. எனவே வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். எனினும் மதானிக்கு பெங்களூரில் சிகிச்சை வழங்க அவர்கள் அனுமதித்தனர். முன்னதாக, கர்நாடக அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அனிதா ஷெனாய், மதானிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அவர் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர். சமுதாயத்திற்கு ஒரு அச்சுறுத்தலான நபர் என்றும் அவர் சுட்டிக் காட்டினார். இவரது வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு மதானியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்