முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ஊக்கத்தொகை 2 கோடி-ஜெயலலிதா

செவ்வாய்க்கிழமை, 3 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 4 - ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஊக்கத்தொகை  ஒரு கோடி ரூபாயிலிருந்து,  2 கோடி ரூபாயாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் வெள்ளி, வெங்கலப்பதக்கம் வென்றவர்களுக்கும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டிகள் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெல்லும் வீரர்கள், வீராங்கனைகளுக்கும் அவர் ஊக்கத் தொகைகளை உயர்த்தியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- செய்தி வெளியீடு மனிதவள மேம்பாட்டின் முக்கிய அங்கமாக திகழும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு இளைஞர்களிடையே உடல்நலம், தோழமை நட்புடன் கூடிய போட்டி மனப்பான்மை ஆகியவற்றை வளர்த்து, அவர்களது ஆளுமைத் திறனை மேம்படுத்த உதவும்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு,  மற்றும் விளையாட்டு வீரர்களிடையே   போட்டி மனப்பான்மையை வளர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள இளைஞர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தக்க பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்து, அவர்களை தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்டு வெற்றி வாகை சூடச் செய்தல்; தலைசிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதுடன் அவர்கள் உயர்ந்த அளவில் சாதனைகள் புரிந்திடும் வகையில் பல்வேறு ஊக்க உதவிச் சலுகைகளை வழங்குதல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விளையாட்டை மேம்படுத்தும் நோக்கத்துடனும், இளைஞர்கள் இடையே விளையாட்டு ஆர்வத்தினை வளர்க்கும் நோக்கத்துடனும்,  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலத்தில்,  அதாவது 1992 ஆம் ஆண்டு, இளைஞர் மற்றும் வியைாட்டுப் பயிற்சித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில விளையாட்டு வளர்ச்சி வாரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு இணையான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ற ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது.
மேலும்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக்காலத்தில், அதாவது 2002​ல்  இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பன்னாட்டு விளையாட்டு போட்டிகளாகிய ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த், தெற்காசிய  மற்றும் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களை கெளரவிக்கும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்க ஆணையிடப்பட்டது.  பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு வழங்கப்படும்  உயரிய ஊக்கத் தொகையை இவ்வாண்டு முதல் மேலும்  உயர்த்தி வழங்க  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார். இதன்படி ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக விளையாட்டு வீரர்கள்/வீராங்கனைகளுக்கான ஊக்கத் தொகை  1 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாயிலிருந்து 1 கோடி ரூபாயாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 25 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும், ஊக்கத்தொகையை   உயர்த்தியும், ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத் தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும்; வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியும்; அதேபோல் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை 1 லட்சம் ரூபாயிலிருந்து  5 லட்சம் ரூபாயாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50,000/​ ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 25,000/​ ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும் மற்றும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் குழுப்போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை 20,000 ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாகவும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 15,000 ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாயாகவும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 10,000 ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாகவும்  உயர்த்தி வழங்க    தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள 9 விளையாட்டு விடுதிகளும் மற்றும் விடுதிகளுடன் கூடிய 3 விளையாட்டுப் பள்ளிகளில் 860 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.  மேலும் தமிழகத்திலிருந்து தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் அதிக அளவில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்துக் கொள்வதற்காக, இந்த விடுதிகளில் தங்கி பயிற்சி பெறும் வீரர்களின் எண்ணிக்கையினை 860லிருந்து 1,100 ஆக உயர்த்தியும், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கென செயல்பட்டுவரும் உயர்தர விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்று வரும் வீரர்களின் எண்ணிக்கையினை 50லிருந்து 80ஆக உயர்த்தியும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு தொடர் செலவினமாக 83 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயும், தொடரா செலவினமாக1 கோடி ரூபாயும் செலவு ஏற்படும்.
மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த 70 பயிற்றுநர்களுக்கு தினப்பயிற்சி திட்டம் எனப்படும் புதிய திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  ஒப்புதல் அளித்துள்ளார். இத்திட்டத்தில் 10​14 வயதுக்குட்பட்ட 20 சிறுவர்/சிறுமியர் ஒவ்வொரு விளையாட்டிற்கும், அவரவரது திறமைக்கேற்ப தொடர் திறனறிவு மற்றும் தொழில்நுட்ப சோதனைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு, விளையாட்டில் சாதனை புரியும் திறனை ஏற்படுத்துகின்ற வகையில்,  பயிற்றுநர் பயிற்சி அளிக்க ஏதுவாக தினப்பயிற்சி மையத்தில் இணைக்கப்படுவர். தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு, ஒரு மாதத்தில்
25 நாட்களுக்கு, தினசரி காலையிலும், மாலையிலும் விளையாட்டு அரங்கில் பயிற்சி அளிக்கப்படும்.  அவர்களுக்கு சிற்றுண்டி, போக்குவரத்துப்படி, சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். இத்திட்டம், கன்னியாகுமரி, விருதுநகர், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், பெரம்பலூர், ஆகிய 5 மாவட்டங்களில் 10 பயிற்றுநர்களுடன் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்திற்காக தொடர் செலவினமாக 18 லட்சம் ரூபாய்க்கு  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  ஒப்புதல் அளித்து ஆணையிட்டுள்ளார்.
விளையாட்டு மேம்பாட்டிற்காக எடுக்கப்படும் மேற்கூறிய நடவடிக்கைகளினால், சர்வதேச விளையாட்டுப்  போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் வகையில், தமிழக விளையாட்டு வீரர்கள்/ வீராங்கனைகளின் திறன் மேம்பாடு அடையும்.      
இவ்வாறு தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்