முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெட்ரோல் விலை உயர்வு இப்போதைக்கு இல்லையாம்

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜன. - 4 - அடுத்த இரண்டு வாரங்கள் வரை பெட்ரோல் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாது என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  கச்சா எண்ணெயின் சராசரி இறக்குமதி விலை டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16 தேதிகளில் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இப்போதைய நிலையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால் அதை ஈடுகட்ட பெட்ரோல் விலையை ரூ. 2 வரை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன. இதற்கான அறிவிப்பு கடந்த திங்கட் கிழமை வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் விலை உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் விலையை உயர்த்த மத்திய அரசு விரும்பவில்லை. கடந்த முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போது கடும் கண்டனம் தெரிவித்த திரிணாமுல் காங்கிரஸ் இனிமேல் விலை அதிகரிக்கப்பட்டால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று எச்சரித்துள்ளது.  லோக்பால் மசோதா விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஏற்கனவே போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில் அந்த கட்சி பெட்ரோல் விலையை உயர்த்தினால் அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்த கூடும் என்று தெரிகிறது. இந்த காரணங்களால் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு இப்போதைக்கு அனுமதி அளிக்கவில்லை என்று எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்