முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்ம தரிசன பக்தர்களுக்கு ஏ.சி. வசதி மீனாட்சி கோயில் ஏற்பாடு

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை, ஜன. - 4 - மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் தர்ம தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சுமார் ரூ. 20 லட்சத்தில் குளிர்சாதன வசதி அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருக்கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்மன், சுவாமி சன்னதியில் தனியார் நிறுவன உதவியுடன் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் கட்டண தரிசன பகுதியில் மட்டுமே இவ்வசதி இருந்தது. கடந்த ஓராண்டாக இவ்வசதியும் செயல்படாமல் இருந்தது. இதையடுத்து தறஅபோது குளிர்சாதன வசதியை மீண்டும் செயல்படுத்திட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அம்மன் சன்னதியில் உள்ள குளிர்சாதன வசதி ரூ. 10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சன்னதியில் உள்ள காற்றை உள்ளிழுக்கும் வசதியுடன் அமைக்கப்பட்ட குளிர்சாதன எந்திரம், தற்போது வெளிப்புறத்தில் இருந்து காற்றை உள்ளிழுக்கும் வசதியுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக கோயில் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  இது போலவே சுவாமி சன்னதியிலும் உள்ள குளிர்சாதன எந்திரம் நவீனமயமாக்கப்பட உள்ளது. அம்மன், சுவாமி சன்னதிகளில் உள்ள குளிர்சாதன எந்திரங்களை நவீனமயமாக்கிட சுமார் 20 லட்சம் ரூபாய் வரை செலவிட உள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது தொடங்கி இருப்பதாகவும் கோயில் பொறியாளர்கள் கூறினர். மேலும் கோவிலில் உள்ள கட்டண தரிசனத்துக்கான டிக்கெட் விற்குமிடம் உள்துறை அலுவலகம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பழைமையை பறைசாற்றும் வகையில் மரத்தாலான தடுப்புகள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் சிறிய மணிகள் தொங்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. கோயில் அலுவலகங்களில் கண்ணாடி தடுப்புகள் அனைத்தும் மாற்றப்பட்டு மரத்தாலான கலை வேலைப்பாடுகள் அமைக்கப்படவுள்ளது. அதற்காக ரூ. 15 லட்சம் செலவிடப்பட்டு வருவதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மீனாட்சி கோயிலுக்கு சுமார் 80 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர். இதில் ரூ. 25 கட்டண தரிசனத்துக்கு 15,800 பேர் வந்துள்ளனர். இக்கட்டணத்தில் கடந்த ஆண்டு 9,.400 பேர்தான் தரிசனம் செய்திருந்தனர். மேலும் ரூ. 100 கட்டண தரிசனத்தில் கடந்த ஆண்டு 2250 பேர் வந்திருந்த நிலையில் தற்போது 4,370 பேர் வந்துள்ளனர். கட்டண தரிசனத்துக்கு மொத்தம் 20,170 பக்தர்கள் வந்துள்ள நிலையில் தர்ம தரிசனத்துக்கு 60 ஆயிரம் பேருக்கும் அதிகமாக வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்