முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மார்ச் 9 ம் தேதிக்கு பிறகே மத்திய பட்ஜெட் தாக்கல்-பிரணாப் முகர்ஜி

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. - 5 - 2012 - 13 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மார்ச் 9 ம் தேதிக்கு பிறகே மத்திய அரசால் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் நேற்று தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் கடைசி நாளில் மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதே போல ரயில்வே பட்ஜெட்டும் பிப்ரவரி 25 ம் தேதி வாக்கில் தாக்கல் செய்யப்படும். இதுவே தொன்றுதொட்டு நடந்து வரும் ஒரு பழக்கமாக இருந்து வருகிறது.  ஆனால் இம்முறை உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த 5 மாநிலங்களில் இம்மாதம் 30 ம் தேதி முதல் மார்ச் 3 ம் தேதி வரை சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதன் காரணமாக தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. எனவே இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது என்று செய்திகள் வெளியாகின.  இத்தகவலை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் ஏற்கனவே உறுதி செய்துள்ளார். தற்போதும் அவர் இதை உறுதி செய்துள்ளார். இது குறித்து நேற்று பிரணாப் முகர்ஜி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பட்ஜெட் தாக்கல் பற்றி பிரணாப் முகர்ஜி கூறியதாவது,  பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதி பற்றி சிந்தித்து வருகிறோம். சட்டமன்ற தேர்தல்கள் முடிந்த பிறகே பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்வோம். காரணம், மார்ச் 9 ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. எனவே மார்ச் 9 ம் தேதிக்கு பிறகே மத்திய பட்ஜெட் அரசால் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 

மார்ச் 3 ம் தேதி வரை சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. மார்ச் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இருந்தாலும் மார்ச் 9 ம் தேதிதான் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருகின்றன. மார்ச் 10 ம் தேதி சனிக்கிழமையாகும். 11 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எனவே மார்ச் 12 ம் தேதி அல்லது அந்த வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வருகிற 11 ம் தேதி முதல் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நடத்தவுள்ளார். 

அப்போது தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள், துறை ரீதியான நிபுணர்கள் ஆகியோருடன் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி 2012 - 13 ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்துவார். வரும் 13 ம் தேதியன்று தொழில் அதிபர்கள் மற்றும் தொழில்தொடர்பான ஜாம்பவான்களை நிதியமைச்சர் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்றும் தெரிகிறது. வரும் 14 ம் தேதி தொழிற்சங்க தலைவர்களையும் பிரணாப் முகர்ஜி சந்தித்து பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்தவிருக்கிறார். 

எது எப்படியோ, மார்ச் 12 ம் தேதிக்கு பிறகே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது அதில் பல நன்மைகளும் அடங்கியிருக்கும். வரி விதிப்பு போன்ற பாதகமான அம்சங்களும் இருக்கும். ஒருவேளை சலுகைகள் அதிகம் இருந்தால் அது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்பதால்தான் பட்ஜெட் தாக்கல் செய்வது தள்ளிப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்