சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் கிளார்க் இரட்டை சதம் இந்திய பந்துவீச்சு சின்னாபின்னம்

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

சிட்னி, ஜன.- 5 - இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன் மழை பொழிந்தனர். இந்திய பந்துவீச்சு ன்னாபின்னமாக்கப்பட்டது.  இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை துவக்கிய ஆஸி. அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்களை எடுத்திருந்தது. அந்த அணிகேப்டன் கிளார்க் 47 ரன்களுடனும், பாண்டிங் 44 ரன்களுடனும் நேற்று காலை இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கினர். இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை. பாண்டிங்கும், கிளார்க்கும் நிதானமாக ரன்களை சேர்த்தவண்ணம் இருந்தனர். தொடர்ந்து அபாரமாக ஆடிய கிளார்க் 136 பந்துகளில் சதமடித்தார். இவரை அடுத்து பாண்டிங்கும் 150 பந்துகளில் சதமடித்தார். இது பாண்டிங்கின் 40-வது டெஸ்ட் சதமாகும். ஆஸி.  அணியின் ஸ்கோர் 325 ஆக உயர்ந்தபோது இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் பாண்டிங் 134 ரன்கள் எடுத்த நிலையில் டெண்டுல்கரால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். 100 வது ரன்னிற்காக ஓடியபோது பாண்டிங் ரன் அவுட் ஆகும் வாய்ப்பில் இருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது. பாண்டிங்கும், கிளார்க்கும் இணைந்து 4 வது விக்கெட்டிற்கு 288 ரன்களை குவித்தனர். இது 4 வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக  இந்தியாவிற்கு எதிராக ஆஸி தரப்பில் எடுக்கப்பட்ட  அதிகபட்ச ரன்களாகும். பாண்டிங் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலமாக பார்ம் இல்லாமல் தவித்துவந்தார். இவரை அணியில் இருந்து நீக்கிவிடலாம் என்றுகூட கருத்து நிலவிவந்தது. இந்நிலையில் சதமடித்த பாண்டிங் அணியில் தன்னுடைய நிலையை உறுதி செய்துள்ளார்.  பாண்டிங் அவுட்டான பிறகு  ஹஸ்ஸி களமிறங்கினார். இவரும் கிளார்க்கிற்கு சிறப்பான ஒத்துழைப்பை கொடுத்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மைக்கேல் கிளார்க் தனது வாழ்வின் முதல் இரட்டை சதத்தை அடித்தார். இந்திய பவுலர்களால் விக்கெட் எதையும் வீழ்த்த முடியாததால் ஆஸ்திரேலியாவின் ரன் எண்ணிக்கை எகிறியது. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 482 ரன்களை எடுத்தது. தற்போதைய நிலையிலேயே ஆஸ்திரேலிய அணி 291 ரன்கள் முன்னணி பெற்றுள்ளது. இரண்டு நாள் ஆட்டம் மட்டுமே முடிவடைந்துள்ளது. ஆஸ்திரேலிய முதல் இன்னிங்சில் இன்னும் 6 வீரர்கள் எஞ்சியுள்ளனர். இந்திய அணி மெல்போர்ன் டெஸ்ட் போலவே ஒரு மிகப் பெரிய தோல்விக்கு தயாராக வேண்டிய நிலையில் தற்போது உள்ளது. வெளிநாடுகளில் தொடர்ச்சியாக 5 டெஸ்ட்டில் தோற்றுள்ள இந்திய வீரர்கள் இந்த டெஸ்ட்டில் என்ன செய்ய காத்திருக்கிறார்களோ? 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: