முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் இன்று திறப்பு ஸ்ரீ நம்பெருமாள் அருள்பாலிக்கிறார்

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

திருச்சி, ஜன.- 5 - ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெறுகிறது.  அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 25 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக ஸ்ரீ நம்பெருமாள் அதிகாலை 3.30 மணியளவில் கருவறையில் இருந்து ரத்தின அங்கி அணிந்து புறப்படுகிறார். 4.30 மணியளவில் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் ஸ்ரீ நம்பெருமாள் சொர்க்க வாசல் திறப்பை கண்டு அருள்பாலிக்கிறார். பின்னர் திருக்கொட்டகை அடைகிறார். அங்கு சாதரா மரியாதையை ஏற்கிறார். பிறகு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை அடைந்து அங்கு நள்ளிரவு 12 மணிவரை வீற்றிருந்து பக்தர்களுக்கு மீண்டும் அருள்பாலிக்கிறார். ஸ்ரீநம்பெருமாள் புறப்பாட்டைத் தொடர்ந்து அதிகாலை 4.30 மணிமுதல் இரவு 10 மணிவரை சொர்க்கவாசல் திறந்தே இருக்கும். பக்தர்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை கருவறையில் முத்தங்கி சார்த்தப்பட்டுள்ள பெரிய பெருமாளை தரிசித்துவிட்டு சொர்க்க வாசல் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சொர்க்கவாசல் திறப்புக்காக திருக்கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆகியவை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்காக தங்கும் வசதி, குடிநீர், கழிவறை வசதிகளை மாநகராட்சி செய்துள்ளது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இன்றும் நாளையும் திருச்சி மாநகரம், கிராமப்புற பகுதிகளில் இருந்து 24 மணி நேரமும் ஸ்ரீரங்கத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. காவல்துறை சார்பாக 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதலே கோவிலின் பாதுகாப்பு பணிகளை துவங்கிவிட்டனர். மேலும் திருட்டு குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு 12 இடங்களில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்களையும் அமைத்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்