:நடப்பு சாம்பியன் வாரிங்கா போராடி வென்று காலிறுதிக்குதகுதி

வியாழக்கிழமை, 5 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜன.- 5 ​- சென்னையில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த ஒற்றையர் 2வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வாரிங்கா போராடி பிரான்ஸ் வீரர் எட்வர்டு ரோஜர் வாசலினை தோற்கடித்து காலிறுதிக்கு நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் மிலோஸ் ரோனிக், டுடி சேலா ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.டி. சர்வதேச டென்னிஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஒற்றையர் 2வது சுற்று போட்டிகள் நடந்தன. இதில் நடுக்களத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் கனடா வீரர் மிலாஸ் ரோனிக்கும், ருமேனிய வீரர் விக்டர் வானெஸ்குவும் மோதினர். இந்த போட்டியில் 4வது நிலை வீரராக வரிசைப்படுத்தப்பட்டவரான ரோனிக், உலக ரேங்கிங்கில் ஒற்றையரில் 31வது இடமும், இரட்டையரில் 368வது இடமும் பிடித்து வருகிறார். இவர் வானெஸ்குவை(90வது ரேங்கிங்) எளிதில் 6க்கு1, 6க்கு4 என்ற நேர்செட்டில் தோற்கடித்து காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இஸ்ரேல் வீரர் டுடி சேலாவும், பிரான்ஸ் வீரர் பெனோட் பெயரும் மோதினர். உலக ரேங்கிங்கில் ஒற்றையரில் இருவருமே 94 வது ரேங்க் பிடித்து வருகின்றனர். இந்த ஆட்டத்தில் முதல் செட்டை சேலா எளிதில் கைப்பற்றினாலும், 2வது செட் ஆட்டத்தில் பெயருடன் போராட வேண்டியிருந்தது. முடிவில் டுடி சேலா 6க்கு2, 6க்கு4 என்ற நேர்செட்டில் வெற்றி கண்டு காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதி ஆட்டத்தில் சேலா, மிலாஸ் ரோனிக்குடன் மோதுகிறார். நேற்று நடந்த பரபரப்பான ஒற்றையர் ஆட்டத்தின் 2வது சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் ஸ்டானிஸ்லஸ் வாரிங்காவும், பிரான்ஸ் வீரர் எட்வர்ட் ரோஜர் வாசலினும் மோதினர். முதல் சுற்றில் வாரிங்கா பை பெற்று நேரடியாக 2வது சுற்றுக்கு முன்னேறி, அதில் நேற்று வாசலினுடன் மோதினார். வாசலின் தனது முதல் சுற்றில் சக நாட்டவரான எரிக் புரோடானை தோற்கடித்து நேற்று 2வது சுற்றில் நடப்பு சாம்பியனை எதிர்கொண்டார். முதல் செட்டில் வாசலின் 6க்கு3 என்ற கேம்களில் கைப்பற்றினார். 2வது செட்டிலும் 3க்கு3 என்ற கேம்கள் வரை சமநிலை செய்தார். எனவே, வாரிங்கா தேருவாரா என்ற நிலையில் 7வது கேமை மிக அபாரமாக பிரேக் செய்து முன்னேறிய வாரிங்கா, 8வது கேமை தக்கவைத்ததோடு, 9வது கேமையும் பிரேக் செய்து 6க்கு3 என 2வது செட்டை கைப்பற்றி 1க்கு1 என்ற செட் சமநிலையை ஏற்படுத்தினார். இதனைத்தொடர்ந்து நடந்த 3வது செட் ஆட்டத்திலும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்ற பாணியில் இருவருமே கடுமையாக போராடினர். 3வது செட்டின் 6வது கேமை சர்வ் செய்த வாசலின் போராடி தக்க வைத்தார். 7வது கேமில் மிக அபாரமாக விளையாடி பிரேக் செய்தும், அடுத்ததை தக்கவைத்தும் 5க்கு3 என முன்னிலை பெற்றார்.

9வது கேமில் மிக அபார சர்வீஸ்கள் மூலம் புள்ளிகள் குவித்த வாரிங்கா இதனை எளிதில் கைப்பற்றியதோடு, இதக்கு அடுத்த கேமில் கடுமையாக போராடி பிரேக் செய்து 5க்கு5 என்ற சமநிலையை ஏற்படுத்தினார். அதோடு 11வது கேமில் சர்வீஸ் வாய்ப்பை தக்கவைத்து 6க்கு5 என முன்னிலை பெற்றார். வாசலினின் சர்வீசை பிரேக் செய்தால் மட்டுமே வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் வாரிங்கா இதில் கடுமையாக போராடினார். ஆனால், வாசலினும் இதனை விடுவதாக இல்லை. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளைப்போன்று மிக அபாரமாக நடந்த போட்டியில் வாரிங்கா போராடி வெற்றி கண்டார்.

ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் nullடித்த இந்த போராட்டத்தில் வாரிங்கா 3க்கு6, 6க்கு3, 7க்கு5 என்ற கேம்கள் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிப்போட்டிக்கு முன்னேறினார். காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கோ சோடாவுடன் மோதுகிறார்.

வாரிங்காவுக்கு கடும் சவால் தந்த வாசலின் 2வது சுற்றோடு ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்று வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: