சென்னை ஓபன்: திப்சரவிக் காலிறுதிப் போட்டிக்கு தகுதி

வெள்ளிக்கிழமை, 6 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜன.6 - சென்னையில் நடைபெற்றுவரும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த 2வது சுற்று ஒற்றையர் ஆட்டங்களில் திப்சரவிக்(செர்பியா), டேவிட் கோபின்(பெல்ஜியம்), யூசி சுகிதா(ஜப்பான்) ஆகியோர் வெற்றி பெற்று காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் 2வது சுற்று போட்டி ஒன்றில் ஜெர்மனி வீரர் ஆன்டிரியஸ் பெக்கும், பெல்ஜியம் வீரர் டேவிட் கோபினும் மோதினர். இந்த ஆட்டத்தில் உலக ரேங்கிங்கில் 98இடம் பிடித்துவரும் பெக், 174வது இடம் பிடித்துவரும் கோபினிடம் கடுமையாக போராட வேண்டியிருந்தது. முதல் செட்டில் பெக் 6க்கு4 என வென்றாலும், அடுத்த 2 செட்டுகளில் கோபினிடம் ஈடு கொடுக்க முடியவில்லை. மொத்தம் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் டேவிட் கோபின் 4க்கு6, 6க்கு4, 6க்கு2 என்ற கேம்கள் கணக்கில் டேவிட் பெக்கை தோற்கடித்து காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் காலிறுதி ஆட்டத்தில் திப்சரவிக்குடன் மோதுகிறார்.

நடுக்களத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜான்கோ திப்சரவிக்கும், இந்தியாவின் யூகி பாம்ரியும் மோதினர். வைல்டு கார்டு அனுமதி பெற்று சென்னை ஓபன் போட்டியின் மெயின்டிராவுக்குள் நுழைந்த பாம்ரி முதல் சுற்றில் கரோல் பெக்கை தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறினார். சென்னை ஓபன் போட்டியின் முதல் நிலை வீரராக வரிசைப்படுத்தப்பட்டவரும், உலக ரேங்கிங்கில் 9வது இடம் பிடித்துவருபவருமான ஜான்கோ திப்சரவிக், நேரடியாக 2வது சுற்றுக்கு தகுதி பெற்று நேற்று அதில் பாம்ரியை எதிர்கொண்டார். முதல் கேமை பாம்ரி சர்வ் செய்ய, அதனை பிரேக் செய்து முன்னேறிய திப்சரவிக், தனது அனுபவ ஆட்டத்தால் 23 நிமிடங்களில் முதல் செட்டை 6க்கு1 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட் ஆட்டத்திலும் இவரது ஆதிக்கம் nullடித்தாலும் கூட, பாம்ரி பாம்ரி 4வது கேமின்போது மட்டுமே சர்வீசை கோட்டைவிட, மற்ற கேம்களில் தக்க வைத்தார். சரியாக ஒரு மணி நேரத்திற்குள் திப்சரவிக் 6க்கு1, 6க்கு3 என்ற கேம்களில் பாம்ரியை சுருட்டினார். குட்டு பட்டாலும் மோதிரக்கையால் குட்டு பட வேண்டும் என்பது போல் யூகி பாம்ரி உலகின் முன்னணி வீரர் திப்சரவிக்குடன் மோதி அதில் தோற்றாலும் ரசிகர்களின் ஆதரவு இவருக்கே அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு 2வது சுற்று ஒற்றையர் ஆட்டத்தில் ஜப்பான் வீரர் யூசி சுகிதா(235வது ரேங்க்) 7க்கு6, 6க்கு4 என்ற கேம்களில் சைனீஸ் தைப்பே வீரர் யென் சுன் லு(82வது ரேங்க்) வை தோற்கடித்து காலிறுதிக்கு நுழைந்தார். இரட்டையர் ஆட்டத்துக்கான காலிறுதிப்போட்டி ஒன்றில் எஸ்.லிப்ஸ்கி மற்றும் ஆர்.ராம் ஜோடி 6க்கு3, 4க்கு6, 10க்கு7 என்ற புள்ளிகள் கணக்கில் கபால் மற்றும் பாரா ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு நுழைந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: