பெயஸ் - திப்சரவிக் ஜோடி இரட்டையர் பிரிவில் சாம்பியன்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      விளையாட்டு
Image Unavailable

சென்னை, ஜன.10​- சென்னையில் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ்(இந்தியா)  - ஜான்கோ திப்சரவிக்(செர்பியா) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. 17​வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நடந்த ஒற்றையர் இறுதிப் போட்டியில் உலகின் 9​ம் நிலை வீரர் செர்பியாவின் ஜாங்கோ டிப்சரேவிச், 31​ம் நிலை வீரர் மிலோஸ் ரோனிக்கை (கனடா) சந்தித்தார்.   இந்த ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. மைதானத்தில் நிரம்பி வழிந்த ரசிகர்கள் கூட்டம், இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதெல்லாம் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இருவரும் தங்கள் `சர்வின்' போது `கேமை' எதிராளி `பிரேக்' செய்ய முடியாதபடி செயல்பட்டனர்.   எல்லா செட்களும் டைபிரேக்கருக்கு சென்றதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. 21 வயதான மிலோஸ் ரோனிக் புயல் வேகத்தில் சர்வ் செய்து ரசிகர்களை திகைக்கச்செய்தார். அதனை எதிர்கொள்ள 27 வயதான டிப்சரேவிச் தடுமாறினார். மிலோஸ் 35 ஏஸ்களை விளாசினார். அது தான் அவரது வெற்றிக்கு முதுகெலும்பாக விளங்கியது. டிப்சரேவிச் 8 ஏஸ்களை மட்டுமே அடித்தார்.   பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் ஒவ்வொரு செட்டும் ஒரு மணி நேரத்துக்கு மேல் சென்றது. மொத்தம் 3 மணி 13 நிமிடம் டித்த இந்த ஆட்டத்தில் மிலோஸ் ரோனிக் 6-7 (4-7), 7-6 (7-4), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் டிப்சரேவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் சென்னை ஓபன் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் கனடா வீரர் என்ற பெருமையை மிலோஸ் ரோனிக் பெற்றார்.   மிலோஸ் ரோனிக் வெற்றி கண்டதும் தான் காலில் அணிந்து இருந்த ஷூவை கழற்றி ரசிகர்களை நோக்கி வீசினார். அத்துடன் டென்னிஸ் பந்துகளையும் கூட்டத்தினரை நோக்கி அடித்து விட்டு ஆனந்தம் கண்டார். சாம்பியன் பட்டம் வென்ற மிலோஸ் ரோனிக்குக்கு ரூ.37 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டியில் லியாண்டர் பெயஸ் (இந்தியா) -​ஜாங்கோ டிப்சரவிக் (செர்பியா) ஜோடி,  இஸ்ரேலின் ஜோனதன் எல்ரிச் -​ஆன்டி ராம் ஜோடியை சந்தித்தது. 73 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் -​டிப்சரவிக்  ஜோடி 6​-4, 6 -​4 என்ற நேர்செட்டில் ஜோனதன் எல்ரிச் -​ஆன்டி ராம் ஜோடியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. லியாண்டர் பெயஸ் சென்னை ஓபனில் இரட்டையர் பட்டத்தை வெல்வது இது 6​வது முறையாகும். இதற்கு முன்பு 1997, 1998, 1999, 2002, 2011 ஆகிய ஆண்டுகளில் லியாண்டர் பெயஸ், மகேஷ்பதியுடன் இணைந்து 5 முறை பட்டம் வென்றுள்ளார். சாம்பியன் பட்டம் வென்ற லியாண்டர் பெயஸ்  - திப்சரவிக் ஜோடிக்கு  சாம்பியன் கோப்பையுடன் ரூ.12 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: