முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பவானியில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பத்தினருக்கு நிதி

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.10 - பவானி நீரில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி மரணமடைந்த ஏழுபேருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் நிதியுதவி செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையத்திலுள்ள பவானி கட்டளை கதவணை நீர்மின் நிலையத்தினை அடுத்துள்ள காவேரி ஆற்றின் நடுவே உள்ள மணல் திட்டில் விடுமுறைக் கழிக்கச் சென்றபோது, பவானி கட்டளை கதவணை நீர்மின் நிலையத்திலிருந்து 8.1.12 அன்று வெளியேற்றப்பட்ட நீரினால் அடித்து செல்லப்பட்டு, 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு நான் ஆழ்ந்த வருத்தமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் அகால மரணமடைந்த ஏழு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்துயரச் சம்பவத்தில் உடனடியாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழந்தவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து துயர் துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட நிருவாகங்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இத்துயர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்