முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வருக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஜன.10 - தமிழகத்தில் நில அபகரிப்பவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், அமைச்சர் பா.வளர்மதி, சரவணபெருமாள், ஓட்டுநர் அணி செயலாளர் கமலகண்ணன், பொள்ளாச்சி ஜெயராமன், தவசி, பி.எஸ்.பாண்டியன், திருநாகேஸ்வரம் ஜலீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் தீய சக்தி கருணாநிதி தலைமையிலான கூட்டணியின் பண பலம், படை பலம், அதிகார பலம் ஆகியவற்றை முறியடித்தவர் முதல்வர் ஜெயலலிதா. 

தன்னுடைய அரசியல் மதி நுட்பத்தின் மூலம் அற்புதமான தேர்தல் வியூகங்களை வகுத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை வெற்றிச் சிகரத்திற்கு அழைத்துச் சென்றார். ஓய்வு, உறக்கம் இன்றி ஒவ்வொரு நாளும் பல நூறு மைல்கள் பயணம் செய்து கடுமையான கோடையையும் பொருட்படுத்தாமல் அனைத்து இன்னல்களையும் தானே ஏற்றுக்கொண்டு போர்க்களமாய் இருந்த தேர்தல் களத்தில் வீர மங்கையாய் சுற்றிச் சுழன்று பணியாற்றினார் முதல்வர் ஜெயலலிதா. 

தேர்தல் களத்தில் கண்ணியம் காத்து தன்னுடைய சொல் ஆற்றல் வழியாக அராஜக தி.மு.க. ஆட்சியின் அவலங்களையும், மத்திய அரசில் பங்கு கொண்ட தி.மு.க. நடத்தி வரும் மிகப் பெரிய ஊழல்களையும் மக்கள் கவனத்திற்கு கொண்டு சென்று விடுதலை பெற்ற இந்தியாவில் இதற்கு முன் இல்லாத அளவிற்கு தேர்தல் களத்தில் ஒரு எழுச்சியை தமிழகத்தில் உருவாக்கினார் முதல்வர் ஜெயலலிதா. 

இத்தகைய உழைப்பின் மூலம் அ.தி.மு.க.விற்கு வெற்றியை ஈட்டி தந்து நம்மையெல்லாம் தலைநிமிரச் செய்த `தங்கத் தாரகை' ஜெயலலிதாவிற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் தனது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து மகிழ்கிறது. 

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.விற்கு அமோக வெற்றியை பெற்றுத் தந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றியும், பாராட்டும், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் சிறப்புமிக்க ஆட்சிக்கு பாராட்டும், நற்சான்று வழங்கும் வண்ணம் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரலாறு கண்டிராத வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முழு முதற்காரணமாக விளங்கியவர் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா. 

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் வகையில், மக்களின் வாக்குரிமையை பறித்து வன்முறை மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தி சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளான முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசு போல் அல்லாமல் ஜனநாயகம் தலைதோங்கும் வகையில் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறும் வண்ணம் மாநில தேர்தல் ஆணையத்திற்கு முழு அதிகாரத்தினை தந்து பொதுமக்களின் பாராட்டையும் நன்மதிப்பையும் பெற்றதோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் தனித்து நின்று முதல் முறையாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அ.தி.மு.க. உடன் பிறப்புகள் உள்ளாட்சி மன்ற அமைப்புகளின் நிர்வாக பொறுப்புகளை ஏற்று மக்கள் பணிபுரிய வியூகம் வகித்ததோடு மட்டுமல்லாமல் 10 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றுவதற்கு வழிவகுத்து தந்த அ.தி.மு.க.வின் `காவல் தெய்வம்' ஜெயலலிதாவுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் தனது நன்றி கலந்த பாராட்டை வழங்கி மகிழ்கிறது. 

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றியவர் முதல்வர் ஜெயலலிதா. தென்தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 2.5 கோடி மக்களின் குடிநீர் தேவைகளையும், பாசன நீர்த் தேவைகளையும் வழங்கி வருவது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீராகும். 

முல்லைப் பெரியாறு அணைக்கு அச்சுறுத்தல் என்றால் அது தமிழக மக்களின் நீர் ஆதாரத்தை அழிக்கும். எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று ஓங்கி ஒலித்த முதல் குரல் நம் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின் குரலே ஆகும்.  

முல்லைப் பெரியாறு அணை பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு தேக்கப்படும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட வேண்டும். அதன் மூலம் தமிழகத்தின் 5 மாவட்டங்களின் நீர் ஆதாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை தமிழக மக்களிடையே உருவாக்கியவர் முதல்வர் ஜெயலலிதாதான். 

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது எடுத்த பெருமுயற்சியின் காரணமாக கிடைக்கப்பெற்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு ஏதுவாக 2006 ஆம் ஆண்டு கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள கேரள அரசை வலியுறுத்தியும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த ஏதுவாக எஞ்சியுள்ள நீண்ட கால அணை பாதுகாப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளத் தடை ஏதும் ஏற்படுத்தக் கூடாது என கேரள அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து ஏகமனதாக நிறைவேற்றி தமிழ் நாட்டின் ஒற்றுமையை நிலை நிறுத்தி உள்ளார். 

இதுமட்டுமல்லாமல் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து அதிகாரம் படைத்த குழு ஆய்வு நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் கேரள அரசின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணியும் வகையில் பாரதப் பிரதமரை தலைவராக கொண்ட தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முல்லைப் பெரியாறு அணை குறித்து வல்லுநர் குழு அமைந்திருப்பதை கண்டித்து உடனடியாக அதனை திரும்ப பெறுமாறு 20.12.2011 அன்று பாரதப் பிரதமருக்கு கடிதம் மூலமாகவும், 25.12.2011 அன்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். முதல்வர் ஜெயலலிதாவின் தொடர் வலியுறுத்தலை அடுத்து அந்த ஆணையை நிறுத்தி வைத்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு கிடைத்த மாபெறும் வெற்றியாகும். 

இப்படி தமிழ் நாட்டு மக்களின் ஜீவாதார உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து போராடி வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. 

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் தனியார் நிலங்கள் மோசடியாக அபகரிக்கப்பட்டதையும், கட்டாய விற்பனை நடைபெற்றதையும் அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதியின் குடும்பத்தினர்களாலும், தி.மு.க. அமைச்சர்களாலும், அவர்களது கூலிப் படையினர்களாலும் மக்களை மிரட்டி அநியாயமாக அபகரிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு அவற்றை உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார். தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நில அபகரிப்பு வழக்குகளை பதிவு செய்து தகுந்த விசாரணை மேற்கொள்வதற்காக காவல் துறையில் தனியாக சிறப்புப் பிரிவு ஒன்றை காவல்துறை தலைமை அலுவலகத்திலும் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த உத்தரவிட்டு நில அபகரிப்பு தொடர்பாக பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறம் காக்கும் இந்த அற்புத நடவடிக்கையால் தமிழகம் முழுவதும் சுமார் 800 ஏக்கர் அளவு உள்ள நிலம் சட்டப்படி மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலங்களை அபகரித்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உள்ளார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடைபெற்றிராத மக்கள் நலன் காக்கும் புரட்சி இது. ஏழை, எளிய மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பை வழங்கி, இனி தமிழ்நாட்டில் நில அபகரிப்பு என்பது இருக்கவே முடியாது என்ற அளவிற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் பணிவுடன் பாராட்டுகிறது. 

அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட்ட நாள் முதல் தீய சக்தி கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் பத்திரிக்கை சுதந்திரம் என்கிற பதத்தை தவறாக பயன்படுத்தி முதல்வர் ஜெயலலிதா குறித்து பொய் செய்திகளை வெளியிடும் மனித கறி  சாப்பிடும் ஈன பிறவி நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் இணை ஆசிரியர் ஆகியோரை உடனடியாக கைது செய்யவும், அந்த பத்திரிக்கையை தடை செய்யவும் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல்துறையை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், அ.தி.மு.க.வினர் யாரும் நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கையை வாங்கக் கூடாது என்றும் ஒருமனதாக அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. 

சமீபத்தில் தானே புயலில் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மக்களை நேரில் சென்று சந்தித்து குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகள் சேதத்திற்கு நிவாரண உதவியாக ரூ.114 கோடியும், குடிநீர் விநியோகத்திற்காக ரூ.50 கோடியும், மின் பணிகளை சீரமைக்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக ரூ.300 கோடியும், பயிற் சேதங்களுக்காக ரூ.166 கோடியும், மீன் பிடி படகுகள் சேதத்திற்கான நிவாவணத் தொகையாக ரூ.20 கோடியும், சாலைகளின் தற்காலிக சீரமைப்பிற்காக ரூ.150 கோடியும், உயிர் இழப்பு, கால்நடை இழப்பு, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டது உட்பட பிற இனங்களுக்காக ரூ.50 கோடியும் ஆக மொத்தம் ரூ.850 கோடி நிதி வழங்கி ஏழை, எளியவர்களுக்கு உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. 

1.5 கோடி தொண்டர்களின் காவல் தெய்வம் 8 கோடி தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் நினைவு நாளன்று அவரது நினைவிடத்தில் எடுத்த உறுதிமொழிப்படி கருணாநிதியின் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈடு இணையற்ற மக்கள் ஆட்சியை நடத்தி நாள் முழுவதும் தமிழக மக்களுக்காக சிறப்பான திட்டங்களை தந்து நல்லாட்சி வழங்கி வரும் ஜெயலலிதாவுக்கு அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் வணங்கி வாழ்த்துகிறது. 

வருகிற 17 ஆம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்தாபகர் எம்.ஜி.ஆரின் 95 வது ஆண்டு பிறந்த நாள் விழாவினையும், அ.தி.மு.க.வின் 1.5 கோடி தொண்டர்களின் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் 64 வது பிறந்த நாளன்று தமிழர்கள் வாழும் அனைத்து மாநிலங்களிலும் பிறந்த நாள் விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏழை எளியோருக்கு நலத்திட்டங்களை வழங்கியும், இனிப்புகள் வழங்கியும், பொதுக் கூட்டங்கள் நடத்தியும் சிறப்பிக்க அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம், மன்ற பொறுப்பாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறது. 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 64 வது பிறந்த நாளான 24.2.2012 அன்று ஒரு நாள் மட்டும் எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்த அ.தி.மு.க. நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதாவிடம் அனுமதி பெறுவது என அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம்ஒரு மனதாக தீர்மானிக்கிறது. 

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்