முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலுக்கு முன்பே நிவாரண உதவிகள் வழங்க உத்தரவு

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      அரசியல்
Image Unavailable

சென்னை, ஜன.11 - கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் பாதிப்படைந்த அனைத்து வீடுகளுக்கும் பொங்கல் பண்டிகைக்குள் மின் இணைப்பு வழங்கவும், பாதிப்படைந்த மொத்தம் ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர்களுக்கு இன்னும் இரண்டே நாட்களுக்குள் நிவாரண உதவிகளை வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-  தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று (10.1.2012) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.  

தானே புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 1,28,664 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 23,257 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக நிவாரண உதவி வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  தானே புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மட்டும் 3.84 லட்சம் குடிசைகள் மற்றும் ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.  இவற்றில், குடிசை வீடுகளை இழந்த இரண்டு லட்சம் பேருக்கும், ஓட்டு வீடுகளை இழந்த 31,000 பேருக்கும் நிவாரணத் தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.  வீடுகளை இழந்த மீதமுள்ள 1,53,000 நபர்களுக்கு இன்னும் இரண்டு நாட்களில் நிவாரணத் தொகையை வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  

விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்த வரையில், சேதமடைந்த 39,790 குடிசை மற்றும் ஓட்டு வீடுகளில், 16,014 நபர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுவிட்டன.  மீதமுள்ள 23,776 நபர்களுக்கு இன்னும் இரண்டு நாட்களில் நிவாரணத் தொகை வழங்கப்படும். குடிநீர் விநியோகத்தைப் பொறுத்தவரையில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சிகளில், வழக்கம்போல, மின்சாரம் மூலம் குடிநீர் விநியோகம் முழுவதுமாக அளிக்கப்பட்டு வருகிறது.  மாவட்டத்தின் பிற பகுதிகளில் மின்சாரம் மூலமும், மின்சாரம் இல்லாத இடங்களில் ஜெனரேட்டர்கள் உதவியுடனும் மற்றும் லாரிகள் மூலமாகவும் குடி நீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஜெனரேட்டர் அல்லது லாரியில் பழுது ஏற்பட்டாலும், குடிநீர் விநியோகத்தை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்க ஏதுவாக, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் 5 லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  

மின்சார விநியோகத்தைப் பொறுத்தவரையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்  ஆணைக்கிணங்க, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு கூடுதலாக 18,000 மின் கம்பங்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அனுப்பப்பட்டுள்ளன. இது போக, மேலும் சுமார் 12,000 மின் கம்பங்கள் பிற மாவட்டங்களிலிருந்தும், மத்திய பிரரேசம், ஆந்திர பிரதேசம், கேரளா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மின்சார சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சேர்ந்த 3,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இது தவிர, பிற மாவட்டங்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும்  மேலும் 5,000 நபர்களை பணியமர்த்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மின் விநியோகம் அளிக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்