முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி அரசு கட்டிக்கொடுத்த சமாதி வீடுகள்

செவ்வாய்க்கிழமை, 15 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை, மார்ச், 16 - ராஜீவ் காந்தி மறுவாழ்வு திட்டம் என்ற திட்டத்தின் கீழ், சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இத்திட்டத்தின் கீழ் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகளை சமாதி வீடுகள் என்று மீனவர்களே வர்ணிக்கிறார்கள். காரணம், கட்டப்பட்ட வீடுகளில் அடித்தளம் இல்லை. அளவுக்கதிகமாக மணல் சேர்க்கப்பட்டு தரமற்ற கம்பிகள், செங்கற்கள் பயன்படுத்தப்பட்டு எந்த நேரத்திலும் வீடு இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால்தான் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட இந்த வீடுகளை சமாதி வீடுகள் என்று மீனவர்களே சொல்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் போராட்டம் பல நடத்தியும் அவர்களுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். 

மக்களின் துயரங்களை தீர்ப்பதில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு நிகர் யாருமே இல்லை என்று அடித்துச் சொல்லலாம். காரணம், அவரது ஆட்சியில் அவர் கொண்டு வந்த பல நல்ல திட்டங்கள்தான். ஏழைகளின் பசிப்பிணி போக்குவதற்காக ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் திருக்கோயில் அன்னதான திட்டம். அதே போல் ஏழை மக்களின் உயிர் காப்பதற்காக அவர் கொண்டு வந்த அற்புதமான திட்டம் இதயம் காப்போம் திட்டம். பிளஸ் 2 படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் கொடுத்தது, படிக்க வசதியில்லாத பொறியியல் மற்றும் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கு அவர்களை நேரிலேயே வரவழைத்து பொருளுதவி செய்தது, இப்படி அவரது நல்ல உள்ளத்திற்கு பல சான்றுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஏழைகளுக்கு ஒரு துயரம் என்றால் ஓடோடிச் சென்று உதவக் கூடியவர் ஜெயலலிதா. 

சமீபத்தில் கூட இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமாரின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அவரது மனைவியை சந்தித்து ஆறுதல் கூறியதோடு ரூ ஒரு லட்சத்தையும் கொடுத்தார் ஜெயலலிதா. இதே போல் மற்றொரு மீனவர் பாண்டியனின் மனைவியை நேரில் வரவழைத்து அவருக்கும் ரூ ஒரு லட்சம் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறி தேற்றினார் ஜெயலலிதா. ஏழைகளின் கஷ்டங்களை தீர்ப்பதில் ஜெயலலிதாவுக்கு நிகர் யாரும் இருக்க முடியாது. 

கடந்த 2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ம் தேதியன்று தமிழகத்தை சுனாமி என்ற கொடிய அரக்கன் தாக்கினான். இந்த சுனாமி பேரலையில் சிக்கி தமிழகம் முழுவதும் சுமார் 10 ஆயிரம் பேர் அப்போது பலியானார்கள். குறிப்பாக, நாகை மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சுனாமி பேரலையில் சிக்கி உயிரிழந்தனர். கடலூர், கன்னியாகுமரி, சென்னை போன்ற மாவட்டங்களையும் சுனாமி பேரலை தாக்கியது. இந்த சுனாமியால் லட்சக்கணக்கான மீனவர்கள் தங்கள் வீடு, வாசல்களையும் இழந்து நடுத்தெருவுக்கே வந்து விட்டார்கள். மீனவர்களின் இந்த துயரத்தை அறிந்த ஜெயலலிதா, உடனடியாக களத்தில் இறங்கினார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரிசி, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை அள்ளி அள்ளிக் கொடுத்தார். 

அது மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தாருக்கு நிதியுதவியும் வழங்கினார் ஜெயலலிதா. மீனவர்களை தேடிச் சென்று அத்தனை உதவிகளையும் தன்னால் முடிந்த வரை செய்தார் ஜெயலலிதா. அவரது இந்தப் பணியை அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனே பாராட்டி விட்டு சென்றார் என்றால் அதற்கு மேல் சொல்லத் தேவையில்லை. ஏழைகளுக்கு இரங்கக் கூடியவர் என்பதால்தான் ஜெயலலிதாவை அன்னை தெரசாவும் ஒரு கட்டத்தில் மனதாரப் பாராட்டினார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சிக்கு பிறகு வந்த தி.மு.க. ஆட்சியில் பல்வேறு அக்கிரமங்கள் நடக்கின்றன. ஏற்கனவே இந்த ஆட்சியில் ரேசன் அரிசி கொள்ளை, மணல் கொள்ளை போன்ற கொள்ளைகள் அரங்கேறி வருகின்றன. அன்றாடம் வழிப்பறி, கொலை, கொள்ளைகளுக்கும் இந்த ஆட்சியில் பஞ்சமில்லை. ஊழல் செய்வதிலும் சாதனை படைத்தது தி.மு.க. ஆட்சி. அதற்கு உதாரணமாக ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலை சொல்லலாம். 

இப்படிப்பட்டவர்கள் எந்த விஷயத்திலும் முறைகேடு அல்லது ஊழலில் சர்வசாதாரணமாக ஈடுபடுவார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக வீடு கட்டிக் கொடுப்பதிலும் தி.மு.க. ஆட்சியில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த வீடுகளை சமாதி வீடுகள் என்று மீனவர்களே வர்ணிக்கிறார்கள். காரணம், கட்டப்பட்ட வீடுகள் எல்லாமே அடித்தளம் இல்லாமல் அந்தரத்தில் தொங்குகின்றன. எந்த நேரத்திலும் இந்த வீடுகள் இடிந்து விழலாம் என்ற சூழ்நிலைதான் நிலவுகிறது. குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் எல்லாமே மோசமான நிலையில் காட்சி அளிக்கின்றன. 

வீடுகளை இழந்து நிற்கதியாக நின்ற மீனவ மக்களுக்காக தமிழக அரசு ( இப்போதைய தி.மு.க. அரசு) ஆணை எண்.60/29.01.2007 அன்று இயற்கை பேரிடர்களை தாங்கக் கூடிய வீடுகள் கட்ட நடவடிக்கை மேற்கொண்டது. தமிழக அரசின் சார்பில் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் சுனாமி மறுவாழ்வுப்பணிகள் நிறைவேற்றப்படும் என்றும் அரசால் அறிவிக்கப்பட்டது. 

இதில் அரசு சார்பில் 1370.59 கோடி ரூபாய் செலவில் 23,157 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டதாகவும், 30,248 வீடுகள் முடிக்கப்படஉள்ளதாகவும் கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்டது. மேலும் 440.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து பேரிடர்களையும் தாங்கும் விதமாக 17 ஆயிரம் கூடுதல் வீடுகள் கட்டப்பட உள்ளதாகவும் அரசு அறிவித்தது. 197.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேரிடர் பாதுகாப்பு மையங்கள் அமைக்கவும், ஆயிரம் இடங்களில் பேரிடர் முன்னெச்சரிக்கை கருவிகள் அமைக்க உள்ளதாகவும் அரசு விளம்பரங்கள் பறைசாற்றின. 

மீதித் தொகை மீனவர்களுக்கான நிவாரண திட்டங்கள், சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ சமூதாய மாணவர்களின் கல்வி உதவிக்காகவும், சாலை வசதி, தெருவிளக்கு வசதி,  அடிப்படைக்கட்டமைப்பு வசதிகளான வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல், மற்றும் வாழ்வாதாரத் திட்டங்களுக்காக ஒதுக்கப் படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில் மீனவர் குடும்பம் பாதுகாப்பாக வாழ கடல் உயர் அலை ஏற்றத்திலிருந்து 200 மீட்டருக்குள் இருந்த பாதிக்கப்பட்ட வீடுகளை அகற்றிவிட்டு அனைத்து பேரிடர்களை தாங்கும் திறன் கொண்ட வீடு கட்டப்படும் என்றும் 325 சதுரஅடி பரப்பளவு கொண்ட இந்த வீடுகள் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இந்த வீடுகள் கட்டுவதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் 213 சிமெண்ட் மூட்டைகள், 22.54 கனமீட்டர் மணல், 40 மில்லிமீட்டர் ஜல்லி 5.40 கனமீட்டர், 20 மில்லிமீட்டர் ஜல்லி 10.46 கனமீட்டர், செங்கற்கள் 24 ஆயிரம், மற்றும் 10 மில்லிமீட்டர் , 8மில்லிமீட்டர் மற்றும் 6மி.மீட்டர் விட்டமுள்ள இரும்பு கம்பிகள் 800 கிலோ என்ற அளவில் கட்டப்படவேண்டும் என்பதை வரையறுத்து அறிவித்த அரசு அதை ஒப்பந்தக்காரர்கள் மூலம் கட்டியது. அவ்வாறு கட்டப்படுவதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அவை வருமாறு:​

வீட்டின் அடித்தளம் இறுக்கமான மண் பரப்பில் அமைக்கப்பட வேண்டும். இறுக்கமில்லாத களிமண், கரிசல் மண் அல்லது வண்டல் மண் போன்ற மண் பரப்பில் அடித்தளம் அமைக்கக் கூடாது. அவ்வாறு அமைக்கப்படுமாயின் அடித்தளம் இறுக்கமில்லாத மண் பரப்பில் உள்வாங்கி சுவர்களில் வெடிப்புகள் தோன்றி விடும். இறுகிய மண் பரப்பு வரும் வரை மேற்புற மண் தோண்டப்பட வேண்டும். அவ்வாறு தோண்டப்பட்ட பகுதியில் கட்டிடத்தின் அடித்தளம் அமைக்க தேவையான ஆழத்திற்கு கீழே தோண்டப்பட்ட பகுதியை மணல் கொண்டு நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பப்பட்ட மணல் நன்றாக இறுக்கப்பட வேண்டும். 

* சிமிண்ட் கலவை கண்டிப்பாக தகர விரிப்பின் மீது அல்லது செங்கல் மேடையின் மீது மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும். வெற்றுத் தரையில் தயாரிக்கப்பட்டால் சிமிண்ட் பால் தரையில் இறங்கி விடுவதற்கும், தரையில் உள்ள குப்பைக் கழிவு, புல் போன்றவை சிமிண்ட் கலவையில் கலந்து விட வாய்ப்புள்ளது. 

* சிமிண்ட் கலவைக்கு பயன்படுத்தப்படும் மணல் கண்டிப்பாக சல்லடை கொண்டு சலிக்கப்பட்டிருக்க வேண்டும். சலிக்கப்படாத மணலில் காணப்படும் சிப்பி, கூழாங்கல் போன்ற தேவையற்ற பொருட்கள் கலவையை தரமற்றதாக்கி விடும். 

*கட்டுமானத்திற்கு முன் பயன்படுத்தப்படும் முன் செங்கற்கள் கண்டிப்பாக நீரில் முழுவதுமாக நனைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் கட்டுமானத்தின் போது சிமிண்ட் கலவையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நீரை செங்கற்கள் உறிஞ்சிக் கொண்டு கலவையின் ஒட்டும் திறனை குறைத்து அதன் பலனாய் சுவற்றின் எடை தாங்கும் திறனையும் குறைத்து விடும். 

*கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் செங்கற்கள் ஒரே சீரான அளவுள்ளதாகவும், ஒரே சீராக மற்றும் நன்றாக சுடப்பட்டதாகவும் இருக்க வேண்டும். தரம் குறைந்த செங்கற்கற்களுக்கு சிமிண்ட் கலவை அதிகளவில் தேவைப்படும். மேலும் மழைக்காலங்களில் நன்றாக சுடப்படாத செங்கற்கள் கரைந்து கட்டிடத்தின் வலிமையை பாதித்து விடும். 

* கான்கிரீட் போட அமைக்கப்படும் அடைப்புகள் தரமான பலகைகள் அல்லது நேர்த்தியான தகரங்களால் ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு பயன்படுத்தப்படும் மரத் தூண்கள் மற்றும் உத்திரங்கள் நேரானதாக இருக்க வேண்டும். 

* இரும்புக் கம்பிகள் வீட்டின் நான்கு மூலைகளிலும் மற்றும் குறுக்குச் சுவர் சந்திப்புகளிலும் அடித்தள கான்கிரீட்டில் இருந்து பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். பேரிடர் தாங்கும் திறனை மேம்படுத்த இரும்புக் கம்பிகளை சுற்றி கான்கிரீட் கொண்டு நிரப்பப்பட வேண்டும். 

*கட்டுமானத்திற்கு தரமான இரும்புக் கம்பிகளை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். 

இப்படி பல்வேறு விதிமுறைகள் வீடு கட்டுவதற்காக வரையறுக்கப்பட்டு உள்ளன. ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் மக்களுக்கு கட்டப்பட்ட வீடுகளில் இந்த விதிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.  

சுனாமி திட்ட செயலாக்க அலகு, ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலமாக  கட்டப்பட்டுள்ள  இந்த சுனாமி வீடுகள் ராஜீவ்காந்தி மறுவாழ்வுத்திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வீடுகள் கட்டும் பணியை பார்வையிட மாவட்ட திட்ட அலுவலர் (சுனாமி) மற்றும் இதற்காக கட்டிட பொறியாளர்கள் (சுனாமி) தனியாக நியமித்தும், மற்றும் மாவட்ட கலெக்டர் நேரடி பார்வையிலும் இத்திட்டம் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த சுனாமி வீடுகள் கடலூர் மாவட்டத்தில் நல்லவாடு கிராமத்தில் 67 வீடுகளும், ராசாபேட்டை கிராமத்தில் 131 வீடுகளும், தாளங்குடா கிராமத்தில் 122 வீடுகளுமாக கடலூர் மாவட்டத்தில் கடலோர பகுதியில்  29 கிராமங்களில் மொத்தம் 1589 வீடுகள் கட்டப்பட்டும், அதில் சில வீடுகள் முடியும் தருவாயிலும் உள்ளன. இதில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்று மீனவ கிராம மக்கள் கூறுகின்றனர். தரமற்ற வீடுகள், அடித்தளம் இல்லாத வீடுகள் கட்டப்படுவதாக கூறி பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லை. கட்டிய வீடுகள் எந்த நேரத்திலும் நில அதிர்வுகளை தாங்காமல் விழும் அபாயம் உள்ளது. பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடித்தால் கூட வீடு இடிந்து உயிர்பலி ஏற்படும் என்றும், இயற்கை பேரிடர்களை தாங்காது என்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர், முதல்வரின் தனிப்பிரிவு என்று புகார் மனுக்களை அனுப்பியும் பலன் இல்லை. ஏனென்றால் ஆளும் கட்சிக்கு நெருக்கமான புள்ளிகளே ஒப்பந்தக்காரர்களாக இருப்பதால் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர்.

இந்நிலையில் நல்லவாடு கிராமத்தை சேர்ந்த சமூக சேகவர் எல்.மணி என்பவர் இந்த ஊழல் மீது விசாரணை நடத்த வலியுறுத்தி மக்களை திரட்டி போராட்டம் நடத்தி வருகிறார். சுமார் இரண்டரை அடி ஆழ அடித்தளம் இல்லாத வீடு இடிந்து விழும் அபாயம் உள்ளது. இதனால்  மக்கள் பலியாக நேரிடும் என்று போராடி வருவதால் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் அதிகாரிகளால் மணி மிரட்டப்பட்டு அவர் உயிருக்கு பயந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இது பற்றி சமூக சேகவர் எல்.மணி நமது நிருபரிடம் கூறியதாவது:​-   

ராஜீவ்காந்தி மறுவாழ்வு புனரமைப்பு திட்டம் 2007-2008 ன் படி கட்டப்பட்டுள்ள வீடுகள் சுனாமி, பூகம்பம், புயல், மழை, வெள்ளம், மண்சரிவு மற்றும் எரிமலை உட்பட 14 வகையான இயற்கை பேரிடர்களை தாங்கும் திறன் கொண்ட வீடுகளாக இருக்க வேண்டும். ஆனால் எங்கள் ஊர் நல்லவாடு மற்றும் ராசாப்பேட்டை உட்பட பல மீனவ கிராமங்களில் அரசு நிர்ணயித்துள்ள மதிப்பீட்டில் அரை பங்கு மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. தரமற்ற சிமெண்ட், தரமற்ற கம்பிகள் , பவுண்டேசன் இல்லாத வீடு மட்டுமே கட்டப்பட்டுள்ளது. எனது தாய் ஆரணியம்மாள் வீடும் போலியாக கட்டப்பட்டது. இதையும் எதிர்த்தேன். அப்போது கடலூர் மாவட்ட திட்ட அலுவராக இருந்த ராஜஸ்ரீயிடம் புகார் தெரிவித்தேன். இதனால் அவர் நேரடியாக  சுனாமி வீடுகளை பார்வையிட்டு இது தரமான வீடுதான் என்று ஒப்பந்தக்காரர் முன்னிலையில் கூறினார். சுவர் போதிய சிமெண்ட் இல்லாமல் மணலால் கட்டப்பட்டுள்ளது என்று சுவரை காட்டினேன். ஆனால் அவர் என்னை மிரட்டினார். கடலூர் முருகன் என்ற ஒப்பந்தக்காரர் மூலம் கட்டப்பட்ட வீடுகள் வலுவில்லாத தரமற்ற வீடுகள் என்பதை அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த ராஜேந்திர ரத்னூவிடம் கூறினேன். மேலும் அப்போது திட்ட இயக்குனராக இருந்த ஜோதி நிர்மலா நேரில் பார்வையிட்டார் ஆனால் எந்த பலனும் இல்லை. மாறாக என்னை அதிகாரிகளும், ஒப்பந்தகாரர்களும் குண்டர்களை வைத்து மயக்க மருந்து தெளித்து காரில் பெங்களுர் கடத்தினர். என் உறவினர்களும், ஊர்க்காரர்களும் புதுவை நீதிமன்றத்தின் முன் சாலை மறியல்  முற்றுகை போராட்டம் நடத்தியதால் என்னை கொலை செய்யாமல் கடத்தியவர்கள் காரிலிருந்து உருட்டி விட்டனர். நான் தப்பி ஊருக்கு வந்து சேர்ந்தேன். சுனாமி வீடுகள் வெறும் சமாதிகளே இதில் குடியிருப்பது ஆபத்து என்பதால் தொடர்ந்து போராடி வருகிறேன். இதனால் எனது தாய் ஆரணியம்மாள் வீட்டை மட்டும் இடித்து விட்டு தற்போது தரமுள்ள வீடாக கட்டி கொடுத்துள்ளனர். மற்றவர்கள் வீடு மழையின் போது ஒழுகுகிறது. இது சம்பந்தமாக தற்போதைய கடலூர்  மாவட்ட கலெக்டர் சீத்தாராமனிடம் புகார் கொடுத்தேன். அவரும் சரியான நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

உனக்கு ஏதாவது தருகிறேன். இந்த பிரச்சனையை விட்டுவிடு என்று ஒப்பந்தகாரர்கள் தூது விடுகிறார்கள். எங்கள் ஊரில் கட்டப்பட்டுள்ள சுனாமிவீடுகளையும், ராசாப்பேட்டையில் கட்டப்பட்டுள்ள சுனாமி வீடுகளையும் இடித்து விட்டு புதிதாக இயற்கை பேரிடர்களை தாங்கும் உறுதியான வீடு கட்டித்தர வேண்டும். மேலும் ராஜீவ்காந்தி மறுவாழ்வு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகள் மிக மிக தரமற்றவை, இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதிலிருந்தே இதில் பெரிய அளவு ஊழல் நடந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.  இவ்வாறு மணி ஆவேசத்துடன் கூறினார்.

தி.மு.க. ஆட்சியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்டித் தரப்படும் வீடுகளில் கூட முறைகேடுகள் நடக்கின்றன. இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல. இந்த நேரத்தில் ஒரே ஒரு பழமொழி நினைவுக்கு வருகிறது. அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பதுதான் அது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago